2வது கணவருக்கு விச ஊசி ஏற்றிவிட்டு, 3வது திருமணம் செய்த பெண் கைது!

குன்னத்தூர் அருகே தோட்டத்துபாளையத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்தார்.

தேவி இங்கிருக்கும் சொத்தை விற்றுவிட்டு திண்டுக்கல்லில் சென்று வாழலாம் என சுப்பிரமணியிடம் தெரிவித்துள்ளார். கடந்த 15ஆம் திகதி சுப்பிரமணியின் காலில் தேவி விஷ ஊசி செலுத்தினாராம். இதில் சுயநினைவை இழந்த சுப்பிரமணியை, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து மீட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தேவி தலைமறைவான நிலையில், இதுதொடர்பாக சுப்பிரமணி குன்னத்தூர் போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து தேவியை தேடி வந்தனர்.

இதையடுத்து அவரது அலைபேசியை கொண்டு போலீஸார் விசாரித்தனர். போலீஸார் விசாரணையில் சுப்பிரமணி இல்லத்தில் இருந்து தப்பிய தேவி, நாமக்கல்லில் ஆண் நண்பரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து அங்கு வாழ்ந்து வந்தவரை, தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணை குறித்து குன்னத்தூர் போலீஸார் கூறும்போது, “திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அய்யம்பட்டியை சேர்ந்தவர் தேவி. தாய், தந்தையர் இல்லை. முத்துக்குமார் என்பவரை முதல் திருமணம் செய்துள்ளார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அவரிடம் இருந்து பிரிந்து, சுப்பிரமணியை 2-வது திருமணம் செய்துள்ளார். சுப்பிரமணியிடம் சொத்தை கேட்டுள்ளார். ஆனால் அவர் தராத ஆத்திரத்தால், சர்க்கரை வியாதி இருந்த சுப்பிரமணிக்கு, ஊசி வழியாக களைக்கொல்லியை உடலில் செலுத்தி கொல்ல முயற்சித்துள்ளார்.

இதில் சுப்பிரமணிக்கு வலிப்பு ஏற்பட்டு நினைவை இழந்துள்ளார். இதில் பயந்து போன தேவி, நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கு சென்றுள்ளார். ஆண் நண்பரான ரவிக்குமாரை சந்தித்து, திண்டுக்கல் பெண்கள் விடுதியில் தங்கி வேலை செய்து வந்ததாகவும், நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி கடந்த 27ஆம் திகதி ரவிக்குமாரை 3 வது திருமணம் செய்துள்ளார். தேவிக்கு குழந்தைகள் இல்லை. திருமணம் செய்து ஆண்களை ஏமாற்றி, சொகுசுவாழ்க்கை வாழ ஆசைப்பட்டுள்ளார்.

அதன்படி சுப்பிரமணியிடம் இருந்த 80 சென்ட் தோட்டத்தை வாங்கிக்கொண்டு தப்பிக்க முயற்சித்துள்ளார். ஆனால் சுப்பிரமணி ஒத்துக்கொள்ளாத நிலையில், விஷ ஊசி போட்டு எழுதி வாங்க முயன்றுள்ளார். இந்தநிலையில் தேவியை குன்னத்தூர் காவல் ஆய்வாளர் அம்பிகா தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். யாருடைய துணையுமின்றி, அவர் இதனை தனியாக செய்து வந்திருப்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Previous articleஇலங்கையில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அண்ணனை நம்பி பணம் அனுப்பிய தங்கைக்கு டாட்டா காட்டிய அண்ணன்
Next articleஉல்லாசமாக இருக்க இளைஞரை அழைத்த பாட்டி வைத்தியசாலையில் அனுமதி!