யாழ்ப்பாணம் பலாலி வடக்கு மக்களை ஏமாற்றிய அரசாங்கம்!

யாழ்ப்பாணம் பலாலி வடக்கு பகுதியில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணியின் ஒரு பகுதி நேற்று விடுவிக்கப்பட்டது.

விடுவிக்கப்பட்டுள்ள காணியில் ஒரு சிறிய பகுதி கூட பொதுமக்களின் காணி அல்ல என காணி உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

சுதந்திரத்திற்கு முன்னர் தமது காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை நம்பி காணி விடுவிக்கப்படும் இடத்திற்கு வருகை தந்த தாம் ஏமாற்றமடைந்ததாக காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

அரசாங்க காணியாக காணப்பட்ட சிறிய காணியை விட்டுவிட்டு பொதுமக்களின் காணி விடுவிப்பதாக ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி தமது பூர்வீகக் காணிகள் மற்றும் வீடுகள் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் செய்து முகாம்களில் வாழ்ந்து வருவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.