ரூ.7.5 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக இறந்ததாக நாடகமாடிய தலைமைச் செயலக ஊழியர் !

ரூ.7.5 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக தான் இறந்ததாக நாடகமாடிய தலைமைச் செயலக ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மலையாளத்தில் வெளியாகி உலகப் புகழ் பெற்ற திரைப்படம் த்ரிஷ்யம். அதில் விசாரணை அதிகாரியாக வரும் பெண் போலீஸ் குற்றத்தை செய்தவர், அதற்கு வேறு ஒரு கதையைக் கற்பிக்க எப்படி எல்லாவற்றையும் திட்டமிட்டு நிறைவேற்றி மூளைச் சலவை செய்திருக்கிறார் என்று பேசியிருப்பார். அதேபோல் சினிமா பாணியில் ஒரு க்ரைம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் வேங்கடபூர் கிராமத்தில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி வழக்கம்போல் அஞ்சய்யா, சங்கரய்யா என்ற இரண்டு தூய்மைப் பணியாளர்கள் ட்ராக்டர் ட்ராலியுடன் பணிக்குப் புறப்பட்டனர். பீம்லா தண்டா பகுதியில் அவர்கள் சென்றபோது சாலையோரம் இரண்டு ப்ளாஸ்டிக் பாட்டில் கிடந்ததைப் பார்த்தனர். அந்த ப்ளாஸ்டிக் பாட்டிலை அவர்கள் எடுத்தபோது ஏதோ விநோத வாசனை வர சுற்றிலும் பார்த்துள்ளன. அப்போது அருகிலிருந்த சாக்கடையில் ஒரு கார் விழுந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அதில் கருகிய நிலையில் ஒரு காரும் இருந்துள்ளது. உடனே அவர்கள் போலீஸுக்கு தகவல் கொடுக்க நிமிடங்களில் அங்கே மக்கள் கூடிவிட்டனர்.

போலீஸ் எஸ்.பி. ரோஹினி ப்ரியதர்ஷினி சம்பவ இடத்திற்கு வந்தார். காரில் இருந்த சடலத்தில் கால்களைத் தவிர மொத்த உடலும் கருகியிருந்தது. கிராம மக்கள் அந்த கார் அதே ஊரைச் சேர்ந்த பத்லோத் தர்மா (44) உடையதுபோல் இருப்பதாகக் கூறினர். காரில் இருந்து மீட்கப்பட்ட ஆதார் அட்டையும், தலைமைச் செயலக ஊழியர் அடையாள அட்டையும் இறந்த நபர் ஊழல் தடுப்பு ஆணையத்தில் துணை செக்‌ஷன் ஆஃபீசராக பணியாற்றியவர் என்று தெரியவந்தது.

நிலைமை இப்படியிருக்க போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி பத்லோத் தர்மா தனக்கு ஏற்பட்ட பங்குச்சந்தை முதலீடு நட்டத்தை சமாளிக்க இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. இதற்கு அவரது மனைவி பத்லோத் நீலா, தேஜாவத் ஸ்ரீநிவாஸ், தேஜாவத் சுந்தா என்ற உறவினர்களும் உதவியுள்ளனர்.

பத்லோத் தர்மா அவரது மனைவி நீலா உறவினர்கள் ஸ்ரீநிவாஸ், சுந்தா ஆகியோர் இணைந்து இன்சூரஸ் பணமான ரூ.7.5 கோடியைப் பெற பத்லோத் இறந்துவிட்டதுபோல் ஒரு காட்சியை உருவாக்க திட்டம் தீட்டியுள்ளனர். அதற்காக பத்லோத் உடல்வாகு ஒத்த நபரை அழைத்துவந்து அவரை காரில் வைத்து எரித்துக் கொலை செய்துவிட்டு இன்சூரன்ஸ் பணத்தைப் பெற்று கடனை அடைக்க திட்டமிட்டுள்ளனர். பின்னர் பணத்துடன் ஊரை காலி செய்துவிட்டு வேறொரு ஊருக்குச் சென்று புதிதாக வாழ்க்கையைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக நம்மபள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் அஞ்சய்யா என்ற நபரை நவம்பர் 2022ல் தேர்வு செய்துள்ளனர். அவரிடம் பேச்சுக் கொடுத்து தனது மாந்தோட்டத்தில் ஒரு மாதம் வேலை செய்ய ஆள் தேவை எனக் கூறியுள்ளனர். மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் சம்பளம் தருவதாகச் சொல்லியுள்ளனர். இதனையடுத்து மீண்டும் ஜனவரி 7-ல் அந்த நபரை தேஜாவத் தொடர்பு கொண்டிருக்கிறார். அஞ்சய்யாவை ஏற்றிக் கொண்டு நிசாமாபாஹ் சென்றுள்ளனர். அப்போது நஞ்சய்யா மது அருந்தியதை தெரிந்து கொண்டனர்.

மது அருந்தியிருந்தால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என்பதால் அவரை ஒரு விடுதியில் அறை எடுத்து தங்க வைத்தனர். ஆனால், நஞ்சய்யா வெளியில் சென்றுவிட்டு திரும்பவில்லை. இந்நிலையில் ப்ளானை கடைசி நேரத்தில் மாற்ற வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் தர்மா உடல் வாகு ஒத்த நபரை தேடி அலைந்துள்ளனர். அப்போது தான் நிஜாமாபாத் ரயில் நிலையம் தொழிலாளர்கள் கூடத்தில் பாபு என்ற நபரை சந்தித்தனர். அவரிடம் ஏதேதோ சொல்லி தங்களுடன் வரச் செய்துள்ளனர். தலையை மொட்டையடித்துவிட்டு தர்மாவின் உடையை அணிந்து கொள்ளச் செய்துள்ளனர். பின்னர் அவரை 8-ஆம் தேதி இரவே வேங்கடபூர் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே காரின் மீது பெட்ரோல் ஊற்றியுள்ளனர்.

அந்தக் காருக்குள் பாபுவை உட்காரச் சொல்லியுள்ளனர். பாபு உட்கார மறுக்கவே அவரை கட்டையாலும் ரம்பத்தாலும் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை உள்ளே வைத்து காரை கொளுத்தியுள்ளனர். பாபு இறந்துவிடவே, அடுத்து இன்சூரன்ஸ் வேலையை ஆரம்பித்தனர். பத்லோத் தர்மா, அவர் மனைவி நீலா ஆகியோரின் செல்போன் உரையாடல்கள், இன்னும் பல சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீஸ் குற்றத்தை கண்டுபிடித்துள்ளனர்

Previous articleகாதலியை கொன்றுவிட்டு சடலத்துடன் தூங்கிய காதலன்..!
Next articleஇன்றைய ராசிபலன் 08/02/2023