சரண்யா உடலில் தொடரும் மர்மம்….

suicideமர்மமான முறையில் உயிரிழந்த எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவி சரண்யாவின் உடலுக்கு மறுபிரேதப்பரிசோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய 3 பேரும் கடந்த 23ம் தேதி கல்லூரியின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து அந்த மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கல்லூரி தாளாளர் மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோரை கைது செய்தனர்.

இதனிடையே, கல்லூரி தாளாளர் வாசுகி சென்னை தாம்பரம் நீதிமன்றத்திலும், அவரது ஆதரவாளர் வெங்கடேசன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், தனது மகள் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக் கோரி, மாணவி சரண்யாவின் தந்தை ஏழுமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘மாணவி மோனிஷாவின் உடலைப்போல, மாணவி சரண்யாவின் உடலையும் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தார். இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மாலா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் சண்முகவேலாயுதம், மனுதாரர் சார்பில் வக்கீல் சங்கரசுப்பு ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆர்.மாலா பிறப்பித்த உத்தரவில், கிணற்றில் பிணமாக மிதந்த 3 மாணவிகளில், மோனிஷா உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய அவரது தந்தை மனு செய்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்டு, மறு பிரேத பரிசோதனைக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை பார்த்து, சரண்யாவின் தந்தை அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்துள்ளார்.

சரண்யாவின் உடல் கடந்த ஜனவரி 24ம்தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதே நாளில் அடக்கமும் செய்யப்பட்டு விட்டது. அதன்பின்னர், கடந்த 3ம்தேதி மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, அடக்கம் செய்யப்பட்டுள்ள உடல் அழுகியிருக்கும். பிரேத பரிசோதனையின்போது குடல், நுரையீரல் உள்ளிட்ட உடலின் முக்கிய உறுப்புகள் அரசு டாக்டர்கள் சேகரித்து, தடய ஆய்வுத்துறைக்கு அனுப்பியுள்ளனர். எனவே, மறுபிரேத பரிசோதனை அவசியம் இல்லை. ஆனால், மனுதாரர் தரப்பு வக்கீல், ‘புதைக்கப்பட்டு 15 நாட்கள் ஆனாலும் பிணத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

எனவே, மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று வாதிடுகிறார். ஆனால், இந்த நீதிமன்றம் மருத்துவ துறையில் நிபுணத்தும் பெற்றிருக்கவில்லை. எனவே, சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடமுடியாது.

இதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்கிறேன். மோனிஷாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்தது இந்த மாணவிகளின் வழக்கின் தற்போதைய நிலை உள்ளிட்ட அறிக்கையை வருகிற வெள்ளிக்கிழமை அரசு தரப்பில் தாக்கல் செய்யவேண்டும். இந்த மனு மீதான விசாரணையை வரும் 12ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

சிபிசிஐடி விசாரணை அறிக்கை முன்னதாக வக்கீல்கள் வாதத்தின் போது, அரசு தரப்பு வக்கீல் சண்முகவேலாயுதம், ‘மோனிஷாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களின் அறிக்கை இன்னும் வரவில்லை. ஆனால், மனுதாரர் வக்கீல் சங்கரசுப்பு, ஊடகங்களில் அறிக்கை வந்து விட்டதாகவும், மாணவிகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பேட்டிக் கொடுத்துள்ளார்.

மருத்துவ அறிக்கையே வராதபோது, எப்படி கொலை என்று இவர் கூறுகிறார்? இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யவேண்டும். மேலும், மாணவிகள் மர்ம சாவு தொடர்பான வழக்கின் அறிக்கையை போலீசார் தாக்கல் செய்யும்போது, அந்த அறிக்கையை மனுதாரர் வக்கீலுக்கு கொடுக்கக் கூடாது. விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் இனி தாக்கல் செய்கிறேன் என்று வாதிட்டார்.

இதற்கு வக்கீல் சங்கரசுப்பு எதிர்ப்பு தெரிவித்தார். மாணவிகளின் சாவு குறித்து ஊடகங்களில் பேட்டியளிக்க தனக்கு உரிமை உள்ளது என்றும் கூறினார். அப்போது நீதிபதி, ‘கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தில் தலையிட முடியாது. அதே போல வழக்கின் நிலைய அறிக்கையை மனுதாரர் வக்கீல்களுக்கு கொடுக்க கூடாது என்று அரசு வக்கீல் கூறுவதை ஏற்க முடியாது.

அந்த அறிக்கையை பெற அவர்களுக்கு உரிமை உள்ளது’ என்று கூறினார். மாணவிகள் மரண வழக்கில், மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய மூவரின் நுரையீரலில் தண்ணீர் இல்லாததால் அவர்கள் கிணற்றில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக சிபிசிஐடி நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஸ்டீவ் ஸ்மித் அணித்தலைவர்: டி20 உலகக்கிண்ண தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு
Next articleஇலங்கையை சைக்கிளில் சுற்றும் வெளிநாட்டு தம்பதிகள் கிளிநொச்சியில்