பெற்றவர்கள் சாபம் நம்மை என்ன செய்யும்? 

ஈன்றெடுத்த தாய், தந்தையர் மட்டுமே நம்முடைய நலனை கடைசி வரையிலும் மனதில் கொள்வார்கள். மற்றவர்களுக்கு உங்கள் தேவை இருக்கும் வரை தான் உங்களுடைய நலனில் அக்கறை இருக்கும், ஆனால் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி நம் மீது அக்கறை காட்டுவது நம் பெற்றோர் தான். அத்தகைய பெற்றவர்களுடைய சாபம் பலிக்குமா? பெற்றவர்கள் சாபம் நம்மை என்ன செய்யும்? 

பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளை வந்து சேரும் என்று கூறுவார்கள். இதுவும் உண்மையான ஒரு விஷயம் தான். பெற்றவர்களுடைய சொத்தில் எப்படி பிள்ளைகளுக்கு பங்கு வந்து சேர்கிறதோ, அதே போல பெற்றவர்கள் செய்த பாவத்திலும் பங்கு வந்து சேரும் என்று சாஸ்திர நியதி உண்டு. இத்தகு பாவங்களில் தலைமுறை தலைமுறையினராக பங்கு பெறுவார்கள்.

அதேபோல பெற்றவர்களுடைய சாபம் பலிக்காது என்று சிலர் கூறுவார்கள். அது உண்மை அல்ல! பெற்றவர்கள் தெரியாமல் கோபத்தில் ஏதாவது சொல்லிவிட்டால் அவைகள் பலிப்பது கிடையாது. ஆனால் அவர்கள் வயிறு எரிந்து சாபம் விட்டால் கண்டிப்பாக பலிக்கும் என்று ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஈன்றெடுத்த தாய், தந்தையரை பேணிப் பாதுகாக்காமல் நடுத்தெருவில் விட்டவர்களை, இந்த உலகம் மன்னித்தாலும் கடவுள் மன்னிக்க மாட்டார் என்று ஆணித்தரமாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அவர்களுக்கான தண்டனையை கண்டிப்பாக இந்த ஜென்மத்திலோ அல்லது அவர்கள் இறந்த பின்பு சுவர்கலோகத்திலோ அனுபவிக்க கூடும் என்பது நம்பிக்கை. சாபங்கள் 13 வகையாக கருதப்படுகிறது. அதில் பெற்றவர்களுடைய சாபம் ஆனது மிகவும் முக்கியமானது! இவர்கள் எப்பொழுதும் நம்மை மனதிற்குள்ளேயே வாழ்த்திக் கொண்டிருப்பார்கள்.

நாம் என்னதான் அவர்களை உதாசீனப்படுத்தினாலும், ஒதுக்கி வைத்தாலும் அவர்கள் நம்மை மனதார நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட நம்முடைய பெற்றவர்கள் வயிறு எரிந்து சாபம் விட்டால், அந்த அளவிற்கு நாம் ஏதாவது ஒன்றை செய்திருப்போம். அத்தகு பழி, பாவம் செய்தவர்களை கடவுள் மன்னிப்பது இல்லை. யாருடைய சாபத்தை வாங்கி கட்டிக் கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் நம்மை பெற்றவர்களுடைய சாபத்தை மட்டும் ஒருபோதும் வாங்கிக் கொள்ளக் கூடாது, இது கண்டிப்பாக பலிக்கும்.

பல பெற்றோர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லங்களிலும், அனாதை இல்லங்களிலும் வசிப்பது உண்டு. இத்தகையவர்கள் கூட மனதால் பிள்ளைகளுக்கு சாபம் கொடுக்க மாட்டார்கள் ஆனால் அப்படி இருக்க ஒரு தாய் அல்லது தந்தை வயிறு பற்றி எரிந்து சாபம் கொடுத்தால் அது எத்தகையதாக இருக்கும்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அந்த அளவிற்கு நாம் மிகப்பெரிய தவறுகளை செய்திருப்போம். அடுத்தவர்களை துன்புறுத்தி இருப்போம். அதனை பொறுத்துக் கொள்ள முடியாததால் தான், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றவர்கள் கூட, நம்மை சபித்து விடுகிறார்கள். அவர்கள் மனதார சபிக்கும் இந்த சாபம் ஆனது இறைவன் உடனடியாக ஏற்றுக் கொள்கிறார். அதனால் அவர்கள் என்ன சாபம் கொடுத்தாலும், அது அப்படியே பலிக்கும். நம்மால் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் போகும். என்னதான் சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்தாலும், கண்டிப்பாக நிம்மதியாக இருந்து விட முடியாது, எனவே பெற்றோர்களுடைய சாபத்தை மட்டும் தெரியாமல் கூட வாங்கி கட்டிக் கொள்ளாதீர்கள்.