நாட்டிலுள்ள 600 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தினால் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொழில் வாய்ப்புக்களை இழப்பார்கள் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சேவை சங்க தலைவர் ஜகத் விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

துறைமுகம், மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகளின் தொழிற்சங்க தலைவர்களுடன் இன்று (26) கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான டொலரை சுயமாக திரட்டிக் கொள்கிறது.

கூட்டுத்தாபனம் கடந்த ஜனவரி மாதம் 1300 கோடி ரூபாய், பெப்ரவரி மாதம் 900 கோடி ரூபாய் இலாபமடைந்துள்ளது. இவ்வாறு இலாபமடையும் நிறுவனத்தையே அரசாங்கம் தனியார் மயப்படுத்த தீர்மானித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கினால் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும். இதனால் நாட்டில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறும்.

மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும்போது பலர் தொழில் வாய்ப்புகளை இழப்பார்கள்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியை சீனாவின் சினொபெக் நிறுவனத்துக்கும், திருகோணமலை துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த பகுதியை இந்தியாவுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கீரியும் பாம்பும் போல் சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கைக்குள் முரண்பட்டுக் கொண்டால் தேவையில்லாத பிரச்சினையை நாடு எதிர்கொள்ள நேரிடும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. சகல தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்த்துள்ளார்.

Previous articleயாழில் ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தைவிருது வழங்கி கௌரவிப்பு
Next articleபத்து தல திரைப்படத்தில் நடனமாட சாயிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?