பண்டிகை காலத்தில் வீதி ஓரங்களில் பொருட்களை விற்க அனுமதி

 பண்டிகைக் காலத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி ஓரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு அமைச்சர் பந்துல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.

காலியில் இடம்பெற்ற புதிய பேருந்துகளை கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்று நிலைமை உள்ளிட்ட நெருக்கடிகள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தமிழ், சிங்களப் புத்தாண்டை வழமை போன்று கொண்டாடும் வாய்ப்பை எமது நாட்டு மக்கள் இழந்துள்ளனர். இதனால் அதிகளவான உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

 ஏப்ரல் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தற்காலிக அனுமதி

சுயதொழில் செய்து வீட்டிலேயே சிறிய அளவில் உற்பத்தி செய்து வரும் தொழில் முயற்சியாளர்கள், தங்கள் பொருட்களை கட்டணம் ஏதுமின்றி வீதியோரங்களில் இருந்து விற்பனை செய்ய, பண்டிகை காலத்தில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தற்காலிக அனுமதி வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, வீதி ஓரங்களில் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில், அந்தந்த பகுதியின் பிரதேச செயலாளரின் அனுமதி மற்றும் மேற்பார்வையுடன், நிரந்தர கட்டுமானத்தை மேற்கொள்ளாமல் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய தற்காலிகமாக இந்த அனுமதியைப் பெறுகின்றனர்.

தற்போது மஹரகம நகரம் உட்பட பல இடங்களில் துணி மற்றும் ஆடைகள் விற்பனைக்காக இவ்வாறான விசேட இடங்களை ஒதுக்கியுள்ளோம்.

அதேபோன்று, நாடளாவிய ரீதியில் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் பண்டிகைக் காலம் முடியும் வரை, ஏப்ரல் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக சுயதொழிலில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்திப் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பினை வழங்குவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.