சரணடைய முன் சொல்ஹய்ம் பதட்டமான குரலில் தொடர்பு கொண்ட புலித்தேவன் வெளிவரா புதிய தகவல்கள்

Palasantern_earikசரணடைய முன்னர் புலித்தேவன் என்னுடன் தொடர்புகொண்டார்: சொல்ஹய்ம் வெளியிடும் புதிய தகவல்கள்

தமிழர்களுக்கு எரிக் சொல்ஹெய்ம் என்ற பெயர் நன்கு பரிட்சிதமான ஒன்றுதான்.

இலங்கைத்தீவில் 25 வருட காலத்திற்கு மேலாக தொடர்ந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது நோர்வே அரசாங்கம். ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் நான்கு பதிவு செய்யப்பட்ட சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் அனைவரும் பெரிதும் அறிந்த சமாதான முயற்சி 2000ஆம் ஆண்டின் ஆரப்பம் முதல் நடுப்பகுதிவரை நடைபெற்றது.

இந்த சமாதான முயற்சியின் நடுநிலையாளர் நோர்வே. இந்த முயற்சியில் நோர்வேயின் சமாதானத் தூதுவராக நியமிக்கப்பட்டவர் எரிக் சொல்ஹெய்ம்.

2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைத்தீவில் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இருதரப்பினரும் யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவித்தனர். 2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் ஸ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரால் நோர்வேயின் பங்களிப்பில் கைச்சாத்திடப்பட்டது.

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றாலும் சமாதானம் நோக்கிய பயணம் நீடிக்கவில்லை. அங்கும் இங்குமான நிகழ்ந்த யுத்த நிறுத்த மீறல்கள் 2005ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மீண்டும் இருதரப்பினருக்கும் இடையிலான முழு அளவிலான யுத்தமாக மாறியது.

2009ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தம் என்ற பெயரில் பல்லாயிரம் உயிர் பலிகளோடு இலங்கைத்தீவின் யுத்த வரலாறுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

2001ஆம் ஆண்டு முதல் இலங்கையின் சமாதான முயற்சியில் ஈடுபட்ட நோர்வே தனது முயற்சி குறித்த புத்தகம் ஒன்றை 2015ம் ஆண்டின் இறுதியில் வெளியிட்டுள்ளது.

இலங்கைத்தீவில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் நோர்வேயின் பங்களிப்பை மற்றும் சமாதானம் ஏன் கிட்டவில்லை என்பதை விளக்கும் வகையில் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

இலங்கைத்தீவில் தோல்வியடைந்த நோர்வேயின் சமாதான முயற்சி ஊடாக கற்றுக்கொள்ளப்படவேண்டிய பாடங்கள் எவை என்பதை அறிந்துகொள்வதற்கு இந்தப் புத்தகம் உதவும் என்ற நம்பிக்கையை நூலின் ஆசிரியர் வெளியீட்டு நிகழ்வுகளிலும் ஊடகங்களுடனான கலந்துரையாடல்களிலும் தெரிவித்து வருகின்றார். ஏற்கனவே விமர்சனங்கள் பலவற்றை எதிர்கொண்டுள்ள இந்தப் புத்தகம் இலங்கையில் சமாதானம் குறித்த பதிவுகளில் இடம்பிடிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.

இந்தப் புத்தக வெளியீட்டுக்காக எரிக் சொல்ஹெய்ம் இந்த வருடத்தின் தை மாதம் கனடாவுக்கு வந்திருந்தார். ரொறன்ரோவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டுக்கு முன்னர் எரிக் சொல்ஹெய்மை சந்தித்து தோல்வியடைந்த நோர்வேயின் சமாதான முயற்சி, இறுதி யுத்த காலத்தில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள், இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம், இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியாவின் பங்கேற்பு, புலம்பெயர் தமிழர்களின் இன்றைய கடமை உட்பட பல்வேறு விடயங்கள் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது.

ஸ்ரீலங்காவின் சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் கலந்துரையாடப்பட்ட சமஸ்டி முறையிலான தீர்வானது சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ளபோதிலும் இன்றும் சாத்தியமானது என எரிக் சொல்ஹெய்ம் எமது உரையாடலின்போது கூறியிருந்தார். இதற்கு கனடாவை மற்றும் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளையும் உதாரணமாகவும் அவர் எடுத்துக்காட்டினார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுக்களின்போது முன்வைக்கப்பட்ட சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏற்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கம் சொல்ஹெய்மிடம் இன்றும் உள்ளதை அவரது உரையாடலின்போது உணரமுடிந்தது.

சமஸ்டி முறையை வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏற்றிருந்தால், தமிழர்கள் அநேகர் அதனை ஏற்றிருப்பார்கள் என்பதில் உறுதியாக இருகின்றார் சொல்ஹெய்ம். வேலுப்பிள்ளை பிரபாரன் சமஸ்டி விடயத்தில் சாதகமான முடிவை எடுத்திருந்தால் தமிழர்கள் மாத்திமல்லாது சிங்களவர்களும் சமஸ்டியை ஏற்கவேண்டிய நிலை தோன்றியிருக்கும் எனவும் சொல்ஹெய்ம் கூறினார்.

இதன் மூலம் பல ஆயிரம் பொதுமக்கள் மற்றும் போராளிகளின் மரணங்களை தவிர்த்திருக்கலாம் என்ற எரிக் சொல்ஹெய்மின் கவலையையும் இங்கு பதிவு செய்யவேண்டும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் இராணுவ வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது உறுதியான நிலையில் இறுதி யுத்தத்தை அரசாங்கம் தானாக கைவிடாது என்பதை நோர்வே அறிந்திருந்ததை நினைவு கூர்ந்தார் எரிக் சொல்ஹெய்ம்.

இறுதிப்போரின்போது யுத்தப் பிரதேசத்தில் அகப்பட்டுக்கொண்ட பொதுமக்களையும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை உட்பட போராளிகளையும் காப்பாற்றும் இறுதி முயற்சி ஒன்றை சர்வதேச சமூகத்துடன் பேசி தான் நேரடியாக மேற்கொண்டதையும் சொல்ஹெய்ம் எம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

தனது முயற்சி வெற்றிபெற்றிருந்தால் பல ஆயிரம் தமிழர்களின் மரணத்தை தவிர்த்திருக்கலாம் எனவும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் உட்பட போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் சாத்தியக்கூறுகள் குறித்தும் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டினார்.

Pulidevan2009ஆம் ஆண்டு யுத்தத்தை நிறுத்த நோர்வே முன்வைத்த திட்டத்தை ஏற்க வேலுப்பிள்ளை பிரபாகரன் மறுத்தது கவலை தரும் முடிவு எனக் குறிப்பிட்ட எரிக் சொல்ஹெய்ம், இந்த விடயத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேறு ஒரு முடிவை எடுத்திருந்தால் மக்கள் காப்பாற்றப்படுவதுடன் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட போராளிகளின் மரணமும் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

ஆனாலும் இறுதி யுத்தத்தின்போது ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட யுத்த மீறல்களையும் மறைக்கவோ மன்னிக்கவோ முடியாது எனவும் எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களை சுட்டிக்காட்டிய சொல்ஹெய்ம் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது புதல்வன் உட்பட இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மன்னிக்கப்பட முடியாதவை எனவும் தெரிவித்தார்.

வெள்ளைக் கொடியுடன் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைய முயன்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர்களான நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட்ட போராளிகள் இராணுவத்தினரால் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டதை பதிவு செய்த எரிக் சொல்ஹெய்ம் சரணடைவதற்கு முன்னர் புலித்தேவன் தன்னிடம் தொடர்புகொண்டு சரணடையும் தமது முடிவை தெரிவித்ததையும் நினைவு கூர்ந்தார்.

புலித்தேவன் இந்தியா உட்பட வேறு நாடுகளுடனும் சரணடையும் தமது முடிவை தெரிவித்ததாகவும் இந்த முடிவு ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் இவர்கள் இருவரையும் கொலை செய்யது யார் என்பதில் தனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை எனவும் கூறினார் சொல்ஹெய்ம்.

சமாதான முயற்சிகள் தோல்வியடைந்ததற்கு இரண்டு முக்கிய காரணிகளை எமது உரையாடலில் எரிக் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியிருந்தார். ஸ்ரீலங்காவின் இரண்டு பிரதான கட்சிகளினாலும் இணைந்து தமிழர்களுக்கான தீர்வை வழங்கமுடியாமல் போனதை சமாதான முயற்சி;களின் தோல்விக்கான முதலாவது காரணமாக குறிப்பிட்டார் சொல்ஹெய்ம்.

மறுபக்கம் தமிழர்கள் தரப்பில் சமஸ்டியை ஏற்றுக்கொள்வதில் விடுதலைப் புலிகளின் தலைவர் தயங்கியதையும் அதனை முழுமையாக புரிந்துகொள்ள மறுத்ததையும் சமாதான முயற்சிகளின் தோல்விக்கான இரண்டாவது காரணியாகும் என தெரிவித்தார் எரிக் சொல்ஹெய்ம்.

இன்றைய நிலையில் இலங்கையில் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்வதற்கு மூன்றாம் தரப்பின் தலையீடோ அல்லது மத்தியஸ்தமோ தேவையில்லை எனவும் எரிக் சொல்ஹெய்ம கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் பெரும் ஆதரவு வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், 20 வருடங்களுக்கு மேலாக ஒருவரை ஒருவர் தெரிந்து வைத்துள்ள, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனா ஆகியோருக்கு இடையில் மூன்றாம் தரப்பிற்கான தேவை இல்லை என்பதே தனது கருத்து எனவும் சொல்ஹெய்ம் கூறினார். ஆனாலும் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவை என இருதரப்பினரும் எண்ணினால் அந்த மூன்றாம் தரப்பு யார் என்பதை அவர்களே தீர்மானிப்பது சிறந்தது எனவும் எரிக் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதில் நோர்வே முன்னணியில் இருந்து செயற்படும் என எவரும் எதிர்பார்க்கக்கூடாது எனபதையும் தெளிவுபடுத்தினார் எரிக் சொல்ஹெய்ம். தற்போது நோர்வே அரசாங்கமோ அல்லது தானோ நேரடியாக இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் தலைமைகளுடன் உத்தியோகபூர்வமான தொடர்புகள் எதனையும் கொண்டிருக்கவில்லை எனவும் கூறிய சொல்ஹெய்ம், தம்மால் வேறு பல வழிகளில் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கமுடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எமது உரையாடலின்போது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தாயகம் திரும்பவேண்டியதன் அவசியத்தை பல்வேறு தருணங்களில் வலியுறுத்திய அவர், ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டியதன் இன்றைய தேவையையும் அங்கு முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் உந்துசக்தியாக இருக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எமது உரையாடலின் முடிவில் இந்தியா குறித்தும் எரிக் சொல்ஹெய்ம் தனது கருத்துக்களை பதிவு செய்த் தவறவில்லை.

இலங்கையின் பூகேள நிலையை கருத்தில் கொண்டு இலங்கை குறித்த விடயத்தில் இந்தியாவின் கரிசனத்தை அறிந்துகொள்ளலாம் எனக் கூறிய சொல்ஹெய்ம், அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளை விட இலங்கை விடயத்தில் இந்தியா அக்கறையுடன் இருப்பதற்கான தேவையும் சுட்டிக்காட்டினார்.

சமாதான காலத்திலும் அதன் பின்னரும் இந்தியா இலங்கையில் நகர்வுகளை அவதானித்து வருவதாக கூறிய அவர், சமாதான முயற்சிகளுக்கு இந்தியாவின் அனைத்து உதவிகளும் கிடைத்தது எனவும் கூறியிருந்தார்.

ரொறன்ரோ கனடாவில் இருந்து இலங்கதாஸ் பத்மநாதன்

நன்றி: தினக்குரல்

Previous articleஇலங்கை நீதித்துறையில் நம்பிக்கை ; அல் ஹூஸைன் பல்டி?
Next articleபுதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் தயார்?