ஹுசைனின் அறிவிப்பால் அதிரச்சியடைந்துள்ள மஹிந்த அணி

QlnLpoxஅரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹுசைன் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு நேரில் சென்று அப்பிரதேச மக்களையும், மாகாண மட்ட அரசியல்வாதிகளையும் நேரில் சந்தித்தார்.
அத்தோடு மாகாண மட்ட அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடிய ஆணையாளர் ஹுசைன் கண்டிக்கு சென்று அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடாதிபதிகளையும் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடனும் தனித்தனிச் சந்திப்புக்களை நடாத்தினார்.
இவ்வாறான சந்திப்புக்களைத் தொடர்ந்து இலங்கைக்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்ட ஆணையாளர் ஹுசைன் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர் மாநாடொன்றை நடாத்தினார்.
அச்செய்தியாளர் மாநாட்டில் அவர், ‘இலங்கைக்கான தமது விஜயம் வெற்றியளித்துள்ளது. இந்நாட்டில் திறமை வாய்ந்த நீதிபதிகள், சட்டத்தரணிகள், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் போன்றோர் உள்ளனர்.
மனித உரிமை மீறல் தொடர்பாக இந்நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கப்பட வேண்டுமா? என்ற விடயம் தொடர்பில் தீர்மானம் எடுப்பது இலங்கையின் இறைமை தொடர்பான விடயம். எம்மால் பரிந்துரைகளை முன் வைக்கலாம். அது தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டியது இலங்கையின் இறைமையைப் பொறுத்ததாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துவரும் நல்லாட்சிக்குக் கிடைக்கப் பெற்ற மற்றொரு வெற்றியாகும். கடந்த வருடம் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி அமைவுற்ற நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மீள உறுதிப்படுத்தி நாட்டில் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் நல்லாட்சி அரசாங்கத்தின் அணுகுமுறைகளும் முன்னெடுப்புக்களும் இந்த வெற்றிக்கு பின்புலமாக அமைந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் தேடித் தருகின்ற வெற்றிகள் அனைத்தும் நாட்டுக்கே நன்மை சேர்க்கக் கூடியன.
அதேநேரம் ஆணையாளர் அல் ஹுசைனின் இலங்கைக்கான வருகையை வைத்து அரசியல் இலாபம் தேட முயற்சித்தமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவர் சார்ந்த அணியினருக்கும் அல் ஹுசைனின் அறிவிப்பு பலத்த அடியாகவே இருக்கும். ஹுசைனின் வருகையால் இந்நாட்டுக்கு பேராபத்து ஏற்படப் போவதாகக் கூறி அவர்கள் மக்களை உசுப்பேற்ற முயற்சி செய்தனர். இந்தப் பின்புலத்தில் சம்புத்தாலோக்க பௌத்த விகாரையில் கையெழுத்து வேட்டையையும் ஆரம்பித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பிழையான அணுகுமுறைகளால் தான் கடந்த காலத்தில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் இருக்கமான போக்கைக் கையாண்டது. பொறுப்புக் கூறுதல்’ விடயத்தில் சர்வதேச பங்குபற்றுதல் இருப்பின் சிறப்பாக அமையுமென ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு நம்பிக்கை வைத்தது.
அவ்வாட்சிக் காலத்தில் நாட்டில் சட்டத்தின் ஆட்சி தோல்வி கண்டிருந்தது. சட்டம் அரசியல்மயப்படுத்தப்பட்டும், பக்க சார்பானதாகவும், நம்பிக்கையற்றதன்மை கொண்டதாகவும் காணப்பட்டது. அந்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துவரும் நகர்வுகளுக்கு உள்நாட்டில் மாத்திரமல்லாமல் சர்வதேச மட்டத்திலும் நல்லபிப்பிராயம் கிடைத்து வருகின்றது.
கடந்த வருடம் ஜனவரி 09 ஆம் திகதி முதல் அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களால் பல முன்னேற்றகர அடைவுகளை இந்நாடு பெற்றுள்ளது. இதற்கான பெருமை நல்லாட்சி அரசாங்கத்தையே சாரும்.
இதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் அவர் சார்ந்தோரும் முன்னெடுத்துவரும் சர்வதேச விசாரணை மற்றும் சர்வதேச நீதிமன்றம் என்ற கூற்றுக்களையும் தவிடுபொடியாக்கிவிடக் கூடியவகையிலும் அல் ஹுசைன் இச்செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ளார்.
‘தாம் வெளியிட்ட அறிக்கை மனித உரிமை மீறல் தொடர்பானது. அது குற்ற விசாரணை தொடர்பானதல்ல. நீதிமன்றம் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் வரையும் மனித உரிமை மீறல்களை நிரூபிக்க முடியாது. அது வரைக்கும் அவை குற்றச்சாட்டுக்கள் மாத்திரமே’ என்றும் அவர் தெளிவாக அறிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியும் அவர் சார்ந்தோரும் அரசியல் இலாபம் தேடவெனப் பெரிதும் நம்பி இருந்த விடயம் அல் ஹுசைனின் அறிவிப்போடு புஷ்வாணமாகிவிட்டது. அவர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் ஊடாக நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்தியுள்ள புரட்சிகர மாற்றங்களை அவரே நேரில் பார்த்தார்.
ஊடக சுதந்திரமும் தகவல் அறியும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டமை மிகச் சிறந்த விடயம். அது தேசிய நல்லிணக்கத்திற்கே பாரிய பங்களிப்பு செய்யும் என்றபடி அவர் தம் அபிப்பிராயங்களையும் தெரிவித்து இருக்கின்றார்.
ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவர் சார்ந்தோரும் நகர்வுகளையும் அணுகுமறைகளையும் உரிய ஒழுங்கில் புரிந்து நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு நல்கவும் இணைந்து செயற்படவும் முன்வர வேண்டும்.

Previous articleடி20 உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் அறிவிப்பு
Next articleஅல் ஹுசேன் மீது கடுப்பானார் பீரிஸ்