யாழ். ஐந்து சந்திப் பகுதியில் விற்பனையாகின்றது கஞ்சா மற்றும் மாவா என்ற போதை கலந்த பாக்கு

mavaaயாழ். ஐந்து சந்திப் பகுதியில் கஞ்சா மற்றும் மாவா என்ற போதை கலந்த பாக்கு என்பன பாடசாலை மாணவர்கள் உட்படப் பலருக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

25 கிராம், 225 மில்லி கிராம் நிறையுடைய கஞ்சா கலந்த மாவா பாக்கைத் தனது உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சட்ட விரோத தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மணிக்கூட்டு வீதிப்பகுதிக்கும், வின்சர்ன் தியேட்டர் சந்திப் பகுதிக்கும் இடையில் உள்ள கராஜ் ஒன்றில் வேலை செய்யும் இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் யாழ்.வயல்கரை வண்ணார் பண்ணைப் பகுதியைச் சேர்ந்தவர். தகவலறிந்த பொலிஸார் குறித்த இளை ஞரை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞரை யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளனர். யாழ்.ஐந்து சந்தி உட்பட சில இடங்களிலுள்ள கடைகளிலும் அத்தகைய போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ். ஐந்து சந்தியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கடைகளை வைத்திருக்கின்றனர். அவர்களில் குறிப்பிட்ட சிலர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்றும், அவர்கள் கைது செய்யப்படும் சந்தர்ப்பங்களில் உடனேயே விடுவிக்கப்பட்டும் விடுகின்றனர் என்றும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் கடந்த சில மாதங்களாக மாவா எனப்படும் போதைப் பாக்கு விற்பனை அதிகரித்துள்ளது என்றும், இதனால் பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ள பொதுமக்கள், இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleசீனாவுக்கு ஆப்பு வைக்கும் இந்திய அமெரிக்க கூட்டு கடல் நடவடிக்கை- என்ன நடக்கப்போகிறது ?
Next articleமன்னார்: வட, கிழக்கு இணைந்த தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும்.