முடங்கும் வடக்கு கிழக்கு!

இலங்கை அரசால் கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடக் கோரியும், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தசிங்கள மயமாக்கலை உடனடியாக நிறுத்தக் கோரியும் இன்று (25.04.2023) முன்னெடுக்கப்படும் பொது முடக்கம் காரணமாக அனைத்துத் துறைகளும் ஸ்தம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளால் ஓரணியாக விடுக்கப்பட்ட பொது முடக்க அழைப்புக்கு வடக்கு – கிழக்கை பிரதான தளமாகக் கொண்டு செயற்படும் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

முடங்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்கள்
அத்துடன் தொழிற்சங்கங்களும் ஏற்று ஆதரவைத் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்கள் முடங்கவுள்ளன.

மக்களுக்கு பொதுமுடக்கம் காரணமாக ஏற்படும் அசௌகரியங்களைப் பொறுத்துக்கொள்ளுமாறும் அவை கோரியுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வர்த்தக சங்கங்களும் பொது முடக்கத்துக்கு ஆதரவளித்துமையால் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படவுள்ளன.

பொதுச்சந்தை வர்த்தகர்களும் இன்றைய தினம் தமது சந்தைகள் கூடாது என்பதை அறிவித்துள்ளனர்.

அனைத்து வகையான வர்த்தக நடவடிக்கைகளும் இன்று முடங்கும் என்று அவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

அதேபோன்று போக்குவரத்துச் சங்கங்களும் ஆதரவைத் தெரிவித்துள்ளமையால் போக்குவரத்துச் சேவைகளும் நடைபெறமாட்டாது.

முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்களும் ஆதரவு வழங்கியுள்ளமையால் அவற்றின் சேவைகளும் இடம்பெறாது. ஆசிரியர் சங்கமும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

பொது முடக்கம்
ஆசிரியர்கள் கற்ப்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள். மாணவர்களை கல்வி நடவடிக்கைக்கு பாடசாலைக்கு அனுப்பி பெற்றோர் வீணான அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நீதிமன்றங்களில் இன்று எந்தவொரு சட்டத்தரணிகளும் முன்னிலையாகமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்றொழிலாளர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் இன்று மீன் சந்தைகளும் கூடமாட்டாது என்று தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய பொது முடக்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு பல பொது அமைப்புக்களும் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஆதரவு கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.