மன்னாரில் கடற்படையினர் கோர வெறியாட்டம்! இரு தமிழ் மீனவர்கள் படுகாயம்!

mannar_fisherman_attack_1கடற்படையினரின் கத்தி வெட்டிற்கு இலக்காகி மன்னார் பள்ளிமுனை மீனவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.மேலும் இருவர் கைது செய்யப்பட்டு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மன்னார் இரணைதீவு கடற்பகுதியில் இச்சம்பவம நடைபெற்றுள்ளது.

இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் இருந்து இன்று சனிக்கிழமை காலை கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட இரு மீனவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர்களில் ஒரு மீனவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர் யாழ்.போதனாவைத்தியசாலையினில் அவசர சிகிச்சை பிரிவினில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகு ஒன்றில் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இதன் போது குறித்த மீனவர்கள் 4 பேரூம் இரணை தீவு பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது காலை 9 மணியளவில் படகு ஒன்றில் வந்த குழுவினர் குறித்த மீனவர்களின் படகிற்கு அருகில் தமது படகினை நிறுத்தியுள்ளனர்.
இதன் போது சுமார் 6 பேர் சிவில் உடையில் முகத்தை மறைத்தவாறும் ஒருவர் கடற்படையினரின் சீருடையுடனும் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடற்படையினரின் சீருடையுடன் காணப்பட்ட நபர் குறித்த மீனவர்களின் படகிற்குள் சென்று கதைத்துக் கொண்டிருந்த போது குறித்த மீனவர்களின் படகிற்குள் காணப்பட்ட கத்தியை எடுத்து ஏசுதாசன் அந்தோனி (வயது-38) மற்றும் ஜேசு ரஞ்சித்(வயது-37) ஆகிய இரு மீனவர்களையும் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளனர்.
இதன் போது குறித்த படகில் இருந்த பேது இரஞ்சன்(வயது-25) மற்றும் ஏ.யூட்சன் டெரன்சியன்(வயது-26) ஆகிய இரு மீனவர்களும் கடலில் பாய்ந்துள்ளனர்.
இந்த நிலையில் காயமடைந்த குறித்த இரு மீனவர்களும் அவர்கள் சென்ற படகில் பள்ளிமுனை கடற்கரையை வந்தடைந்த நிலையில் குறித்த இரு மீனவர்களும் கடற்கரையில் காணப்பட்ட சக மீனவர்களின் உதவியுடன் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதன் போது கடும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான குறித்த இரு மீனவர்களுக்கும் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் ஜேசு ரஞ்சித்(வயது-37) எனும் மீனவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். ஏசுதாசன் அந்தோனி (வயது-38) என்ற மீனவர் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடலில் குதித்ததாக கூறப்படும் பேதுரூ இரஞ்சன்(வயது-25) மற்றும் ஏ.யூட்சன் டெரன்சியன்(வயது-26) ஆகிய இரு மீனவர்களும் கைது செய்யப்பட்டு கடற்படையால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Previous articleஐ.எஸ். தீவிரவாதிகள் செய்த கொடூர தண்டனை
Next articleசெல்ல முடியாத உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் மக்களை கூட்டிச்சென்ற அங்கஜன்