ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்! சம்பந்தன் வலியுறுத்தல்

download (1)ஆங்கிலேயரினால் சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட தமிழரின் நாட்டை மீண்டும் தமிழர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் இன்றைய திவயின வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்நாடு கடந்த ஒரு தசாப்த காலமாக சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டிருந்தது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜெனீவா இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்போது இலங்கை மீண்டும் சர்வதேச கௌரவத்தை பெற்றுள்ளது.

எனவே இது தொடர்பாக அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதான நியாயமான விசாரணை நடத்தப்படுவதன் ஊடாக மட்டுமே இலங்கை தனது கௌரவத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

நாம் அனைவரும் இலங்கையர் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இனத்துவ ரீதியில் தனித்துவமானவர்கள். அதன் காரணமாக தமிழர்களுக்கு தனியான பிரதேச சுயாட்சி வேண்டும். அதற்கு ஈடான அதிகாரத்தை ஏனைய சிங்களப் பகுதிகளுக்கும் வழங்குவதில் தவறில்லை.

அந்நியர் இந்நாட்டை ஆக்கிரமிக்க முன்னர் இந்நாட்டு கண்டி ராஜ்ஜியம், கரையோர ராஜ்ஜியம், தமிழர் ராஜ்ஜியம் என மூன்று தேசங்களாக ஆளப்பட்டிருந்தது. 1833ம் ஆண்டு ஆங்கிலேயர் ஒட்டுமொத்த நாட்டையும் ஒரே தேசமாக மாற்றி அமைத்தனர்.

அதன் பின்னர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்படும் போது தமிழரின் நாடும் சிங்களவரின் கையில் கையளிக்கப்பட்டுவிட்டது. அதனையே இப்போது நாங்கள் திருப்பிக் கேட்கின்றோம். சமஷ்டி அடிப்படையிலான தீர்வின் மூலமாக நாங்கள் தொடர்ந்தும் சிங்களவருடன் சேர்ந்து வாழவே விரும்புகின்றோம் என்றும் ஆர். சம்பந்தன் தனது நேர்காணலில் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

Previous articleஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் பின் நிலவும் மர்ம மௌனம்?
Next articleஇளையதளபதியை சந்தித்த விஜய்-60 படக்குழுவினர்