காலையில் தயிர் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

தற்போது வெயில் காலம் என்பதால் பலரது வீடுகளில் தயிர் எப்போதுமே இருக்கும். தயிர் என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

இது நன்கு க்ரீமியாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

பலர் கோடைக்காலத்தில் தயிரை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருவார்கள். தயிரை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.

அதுவும் தயிரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கப் சாப்பிட்டால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

தயிரில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. தயிர் ஒரு லைட் ஃபுட் மற்றும் இது பாலை விட வேகமாக ஜீரணமாகக்கூடியது.

இப்போது தயிரை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பெறும் நன்மைகளைக் காண்போம்.

செரிமானத்திற்கு நல்லது

தயிரில் நல்ல பாக்டீரியாக்களான புரோபயோடிக்குகள் அதிகம் உள்ளன. இந்த செயலில் உள்ள நுண்ணுயிரிகள் குடலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

எனவே ஏற்கனவே செரிமான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் தயிரை தினமும் காலையில் உட்கொள்ள, அப்பிரச்சனைகளைப் போக்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடலைத் தாக்கும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்து, குடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன. ஆய்வு ஒன்றில், தயிர் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளன.

எப்படியெனில் தயிரில் உள்ள புரோபயோடிக்குகள் இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. உடலில் வெள்ளைணுக்களின் அளவு சிறப்பாக இருந்தால் நோயெதிர்ப்பு மண்டலமும் வலுவாக இருக்கும்.

சரும ஆரோக்கியம்

தயிரை தினமும் உட்கொண்டு வந்தால், அது சருமம் வறட்சி அடைவதைத் தடுத்து, சருமத்தை போதுமான ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். ஒருவருக்கு இரைப்பை குடல் பிரச்சனைகள் இருந்தால், அது சருமத்தில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஆனால் தயிரை காலையில் எழுந்ததும் உட்கொள்ளும் போது, இரைப்பை பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி, சரும பிரச்சனைகளும் தடுக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம் குறையும்

ஆய்வு ஒன்றில் தயிரை தினமும் உட்கொண்டு வந்தவர்களுக்கு தயிரை உட்கொள்ளாதவர்களை விட 31 சதவீதம் உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

தயிரில் புரோட்டீன்களுடன், பொட்டாசியம், வைட்டமின் பி12 மற்றும் மக்னீசியம் போன்ற இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் தயிரை உட்கொண்டு வந்தால், அது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

எலும்புகளுக்கு நல்லது

ஒரு கப் அதாவது 250 கிராம் தயிரில் சுமார் 275 மிகி கால்சியம் உள்ளன. இது ஒரு நாளைக்கு இந்த அளவு கால்சியத்தை ஒருவர் பெற்றோமேயானால், எலும்புகள் வலுவாகவும், அடர்த்தியுடனும் இருக்கும்.

தயிரில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் குறைவு என்பதால், இது உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும். அதோடு, தயிர் பற்களை வலுவாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. 

எடை குறைய உதவும்

நமது வயிற்றைச் சுற்றி கெகாழுப்புக்கள் தேங்குவதற்கு காரணம் கார்டிசோல் என்னும் ஹார்மோனின் ஒழுங்கற்ற தன்மை தான் காரணம். தயிரில் கால்சியம் அதிகளவில் உள்ளன. இவை கார்டிசோல் உற்பத்தியைக் குறைத்து, நம்மை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

மேலும் தயிர் லைட் ஃபுட் மட்டுமின்றி, வயிற்றை எளிதில் நிரப்பக்கூடியது. எனவே எடையைக் குறைக்க நினைத்தால், காலையில் ஒரு கப் தயிரை சாப்பிடுங்கள்.