வீதியில் கண்டெடுத்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்து நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்திய இளைஞர்கள்

காத்தான்குடியில் உள்ள வீதி ஒன்றில் கண்டெடுத்த 400,000 ரூபாய் பணத்தை காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி – இரும்புத் தைக்கா பள்ளிவாசலுக்கு முன்பாக இன்றைய தினம் (22-05-2023) நண்பகல் 12.30 மணியளவில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட ரூபா 400,000 பணத்தை காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எம்.மொய்னுல்ஹக் என்ற இளைஞர் கண்டெடுத்துள்ளார்.

அவருடன் கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த தெய்வதீபன் என்ற முச்சக்கர வண்டி சாரதியும் இருந்துள்ளார்.

கண்டெடுக்கப்பட்ட பணத்தை காத்தான்குடி காவல் நிலைய போதையொழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாமிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து குற்றத்தடுப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நணயசிறி பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.

கடைக்காரர் ஒருவர் சீனி கொள்வனவிற்காகக் கொடுத்த மேற்படி பணத்தை சாதாரண லொறிச் சாரதியான நபர் கொண்டு வரும்போதே காணாமல் போயுள்ளது.

பணத்தைத் தொலைத்த நபர் மிகுந்த நன்றி உணர்வுடன் அதனைப் பெற்றுக் கொண்டார்.

காவல் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எம்.எஸ்.ஏ.எம்.றஹீம் உட்பட பொலிஸ் அதிகாரிகளும் அதில் கலந்து கொண்டனர்.

Previous articleவிவசாயிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!
Next articleஇம்முறை சாதரணதர பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!