ஈழத் தமிழரின் குருதிக்கு விலை பேசும்….. கருணாநிதி

DMK-congressதமிழ்நாட்டில் திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழர் பிரச்சி்னை மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஆயுள்காலம், வரும் மே மாதம் நிறைவடையவுள்ள நிலையில், புதிய சட்டமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான முன்னாயத்தப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகளும், ஏற்கனவே தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையிலும், ஆளும் அதிமுகவை தோற்கடிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியுடன், மீண்டும் நேற்று கூட்டணி அமைத்திருக்கிறது திமுக.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், நேற்று முற்பகல் திமுக தலைவர் கருணாநிதியுடன் நடத்திய பேச்சுக்களின் பின்னர், வரும் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவாகியது.

ஏற்கனவே, இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்ததுடன், மத்திய அரசாங்கத்திலும் இணைந்திருந்தன.

இந்தக் கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணி அமைத்திருந்த வேளையிலேயே, 2009ஆம் ஆண்டு வன்னியின் கிழக்குப் பகுதியில் சிறிலங்காப் படைகளால் இறுதிக்கட்டப் போர் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட இந்தப் போருக்கு, அப்போது புதுடெல்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கமும் ஆதரவளித்திருந்தது. திமுகவும் அப்போது மத்திய அரசில் இணைந்திருந்தது.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைகள் பற்றிய தகவல்கள் வெளியான போது, அதற்குத் துணைபோனதாக, காங்கிரஸ்- திமுக கூட்டணி மீது தமிழ்நாட்டில் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தநிலையில்,காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தி தமிழ் நாட்டில் பெருகி வந்த நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அந்தக் கட்சியுடனான கூட்டணியை திமுக முறித்துக் கொண்டது.

எனினும், அப்போது அதிமுகவுக்கு ஆதரவாக காணப்பட்ட அலையில், திமுகவினால் ஒரு ஆசனத்தைக் கூட வெற்றிகொள்ள முடியாமல் போனது.

இந்த நிலையில், மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி சேர்ந்திருப்பதால், இலங்கைத் தமிழர் படுகொலை விவகாரம், வரும் சட்டமன்றத் தேர்தலில் தீவிர பரப்புரை ஆயுதமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் மே மாதம் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதிமுக மற்றும் மக்கள் நலக் கூட்டணி என்பன இந்த விவகாரத்தை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக தமிழ் நாடு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleகாதலர் தினத்தில் மாலையும் கழுத்துமாக சிம்பு-நயன்தாரா பரபரப்பான நிலை
Next articleவிஜயகலா -மகேஸ் சேனநாயக்கா சந்திப்பாம்?