மன்னார் இலுப்பக்கடவையில் மக்களின் நிலத்தில் அமைக்கப்பட்ட இராணுவமுகாம் மேலும் பலப்படுத்தப்படும் நடவடிக்கை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்லாட்சியில் தற்காலிக இராணுவமுகாங்கள் நிரந்தரமாக்கப்படுகிறதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இலுப்பைக் கடவையில் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட இராணுவ முகாமை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். பொதுமக்களுக்குரிய காணிகளில் இராணுவத்தினர் முகாமிட்டு தங்கியுள்ளனர். தமது காணிகளை விடுத்து தம்மை மீள்குடியேற்றுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் குறித்த இராணுவமுகாமை தற்போது பலப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பாரிய பெயர் பலகையை பொருத்துதல் மற்றும் மதில்களை அமைத்து இராணுவ முகாமை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் இராணுவ குறைப்பு செய்யப்படும் என்றும் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டபோதும் தொடர்ந்து இராணுவமுகாங்கள் பலப்படுத்தும் நடவடிக்கை தொடர்வது தமக்கு அதிர்ச்சியளிப்பதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இராணுவமுகாங்களினால் தமது இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் மிகவும் பின்தங்கிய தமது பகுதியில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு என்பன சந்தேகமான சூழலில் இருப்பதாகவும் இராணுவத்தை அகற்றி சிவில் சூழலை ஏற்படுத்த அரசு முன்வரவேண்டும் என்றும் அப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.