யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் மூன்று சந்தேகநபர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கே யாழ். நீதவான் சின்னதுறை சதீஸ்தரன் இன்று இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய 72 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். எனினும் 65,66 மற்றும் 67 ஆம் இலக்க சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை.
இன்றைய விசாரணைகளை அடுத்து குறித்த 3 சந்தேகநபர்களுக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன் அடுத்த விசாரணையின் போது அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதவான் சின்னதுறை சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த வருடம் மே மாதம் கூட்டு வன்புனவர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வித்தியாவின் கொலை தொடர்பில் நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாழ். நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் நீதிமன்றக் கட்டட தொகுதி மீது தாக்குல் மேற்கொள்ளப்பட்டதுடன், அரச சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.