தேசிய பாதுகாப்பில் ஏற்பட்டிருக்கும் விரிசலும் வடக்கில் தலைத்தூக்கியுள்ள பிரிவினைவாதமுமே இன்று சம்பந்தன் மற்றும் சுமந்திரன் என்போர் பாராளுமன்றத்தில் தமிழீழ கோரிக்கைகளை தைரியமாக கோருவதற்கு வித்திட்டுள்ளன என்று தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
அன்று தோற்கடிக்கப்பட்ட தமிழீழ கொள்கைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரான செயித் அல் {ஹசைன் மூலம் அடையும் முயற்சி பலமாக முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
2002 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியினால் அடைய முடியாதவற்றை நிறைவேற்றிக்கொள்ளவும், ஜோர்ஜ் புஷ் மற்றும் டேவிட் மிலிபேன் போன்றோர் நாட்டை பிளவுபடுத்தி இலங்கை இராணுவத்தை காட்டிக்கொடுக்க முயன்றதை தற்போது செயித் அல் {ஹசைன் வருகையின் மூலம் நிறைவேற்றிக்கொள்ளவுமே முற்படுகின்றது.
இந்நாட்டில் இராணுவ வீரர்களின் நலன் தொடர்பில் யாரும் கண்டுக்கொள்வதில்லை. முப்பது வருட கால யுத்தத்தினை நிறைவு செய்து நாட்டின் சுமூகமான வாழ்வுக்கு இவர்களே காரணமாகும். ஆனால் தற்போதய நல்லாட்சி அரசாங்கம் இராணுவ வீரர்களை காட்டிக்கொடுத்து சிறைக்கு அனுப்பவே முயற்சிக்கின்றது.
பயங்கரவாதத்திற்கு எதிராக தங்களது உயிரையும் தியாகம் செய்யும் இராணுவ வீரர்களுக்கு நாம் பெரும் கடமைப்பட்டவர்கள். ஆகவே நாம் அவர்களை மதிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கென பெரும் தியாகங்களை செய்யும் அவர்களை சிறைக்கு அனுப்பி தண்டனை வழங்கவே தற்போதய அரசாங்கம் முயற்சிக்கின்றது.