ஸ்ரீலங்கா ரக்பி அணி வீரர் வசீம் தாஜுடீனின் கொலை தொடர்பான சி.சி.ரி.வி காணொளிகள் தொடர்ந்தும் நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த காணொளிகளை ஆய்வுகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்புமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரீஸ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் குறித்த வழக்கு தொடர்பான காணொளிகளை நீதிமன்ற பொறுப்பில் இருந்து குற்றப் புலனாய்வு பிரிவினர் இதுவரை கையேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணொளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டிருந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணணித்துறை துல்லியமான தகவல்களை பெற முடியாதுள்ளதாக நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது.
அத்துடன் இந்த காணொளிகளை வெளிநாட்டு தடயவியல் ஆய்வு நிறுவனங்களுக்கு அனுப்பி விடயங்களை கண்டறிய முடியும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகம் பரிந்துரை செய்திருந்தது.
வசீம் தாஜுடீனின் கொலை இடம்பெற்ற நாளன்று பதிவான குறித்த காணொளி, வாகனங்களின் அதிக வெளிச்சம் காரணமாக தெளிவற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.