விமான நிலைய விஸ்தரிப்பு! துறைமுக அபிவிருத்தி! காணிகளை சுவீகரிக்கும் யோசனை அடியோடு நிராகரிப்பு

5921பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்காக பொதுமக்களின் காணிகளை சட்டபூர்வமாகச் சுவீகரிக்கும் அரசின் யோசனையை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று திட்டவிட்டமாக நிராகரித்தார்.
இதனை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் நேற்று கொழும்பில் வைத்து நேரடியாகத் தெரிவித்தார்.

அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கின் விவசாயம் மற்றும் மீன்பிடியின் அதியுச்ச மூலங்களாக உள்ள நிலங்களை அபகரிப்பது வடக்கின் வடக்கின் பொருளாதாரத்தை மேலும் சிதைக்குமே தவிர மேம்பாட்டுக்கு உதவாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரச தரப்பினருக்கும் வட மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான் சந்திப்பு நேற்று மாலை 5.30 முதல் இரவு 7 மணிவரை கொழும்பில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் அரச தரப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோர் பங்கேற்றனர்.

வட மாகாண சபை சார்பில் முதலமைசர் விக்னேஸ்வரன் தலைமையில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

வடக்கின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த அரச அதிபர்களும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பிரதமரின் யோசனைப் பிரகாரம் வடக்கின் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை நேற்று பிரதமர் தலைமையிலான அரச தரப்பினரிடம் கையளிக்கப்பட்டன.

சர்வதேச நிதிக் கொடையாளர்களின் மாநாடு விரைவில் கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில் அவர்களிடம் இத்திட்டங்களைச் சமர்ப்பித்து உதவிகளைப் பெற்றுக் கொள்வதே இதன் நோக்கமாகும்.

பிரதானமாக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து அதனை உள்ளுர் விமான சேவைகளை ஆரம்பித்தல், மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி போன்ற திட்டங்களுக்கு நிதியைப் பெற்றுக் கொள்வதே அரச தரப்பின் பிரதான நோக்கமாகக் காணப்பட்டது.

தமிழ்த் தேசியப் பொங்கல் விழாவுக்காக கடந்த மாதம் யாழ்ப்பாணம் வந்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது குறித்த அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை வலியுறுத்தினார்.

பலாலி விமான நிலையம், மயிலிட்டி மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்குத் தேவாலய நிலங்கள் தொடர்பான கணக்கொடுப்பை மேற்கொள்ளுமாறும் அவர் அரச அதிகாரிகளைப் பணித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் ரணில் தலைமையிலான அரசின் மக்கள் காணிகளைச் சுவீகரித்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை முதலமைச்சர் நேற்றைய சந்திப்பில் அடியோடு நிராகரித்து விட்டார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, குழங்களை புனரமைத்தல், புதிதாக அமைந்தல், விவசாய, கல்வி மேம்பாட்டுக்கான தேவைகள், முன்னாள் போராளிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு, தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தமது திட்டங்களை முதலமைச்சர் பிரதமரிடம் நேற்று கையளித்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், அபிவிருத்தி திட்டங்களை காரணமாகக் கூறி ஏற்கனவே இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலய நிலங்களை நிரந்தரமாக சுவிகரிக்க அரசு எடுக்கும் முயற்சிகளை அந்த மக்கள் விரும்பவில்லை என்றார்.

மயிலிட்டித் துறைமுகம் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியமான ஒரு பகுதி. பலாலி உள்ளிட்ட வலி.வடக்கின் பெரும்பாலான இடங்கள் எமது அடிப்படை வாழ்வாதாரத்துக்கு அவசியமான விவசாயத்துக்கு பெரும் பங்களிப்பு வழங்கும் இடங்கள். இந்நிலங்களை அபிவிருத்திக்கெனக் கையகப்படுத்துவது வடக்கின பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாறாக சிதைக்கவே வழி செய்யும்.

எனவே இந்த நிலங்களை மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப அவர்களிடமே மீளக் கையளிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Previous articleமுட்டை சாப்பிட்டால் மாரடைப்பு வராது! புதிய ஆய்வில் தகவல்
Next articleயாழ்ப்பாணத்தில் வீதியில் பொலிஸார்