நீண்ட காலமாக நிலவிய பனிப்போர் தேசிய பொங்கல் விழாவுடன் நிறைவு பெற்றாலும் வடக்கின் முதலமைச்சருடன் நெருங்குவதால் மட்டுமே வெற்றியடைய முடியும் என கருதிய சந்திரிகா, அதற்கான வியூகத்தை நேற்று செயற்படுத்தினார்.
இதன் ஆரம்பமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினருக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று அலரி மாளிகையில் ஏற்பாடு செய்தார்.
நேற்று மாலை 5 மணி முதல் 7 மணிவரையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், வடமாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முன்னாள் ஆளுநர் பளிஹார, வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் ஐந்து மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் திறைசேரியின் முன்னாள் செயலளார் எஸ்.பாஸ்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோன்று வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவில் மாகாண அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்போது வடமகாகாணத்தின் உடனடித் தேவைகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் எடுத்துரைத்தார்.
வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. மிகப் பெரியளவிலான நிதி முதலீட்டுத் திட்டங்களை வடக்கு,கிழக்கு மாகாண நிதி உதவி வழங்கும் மாநாட்டில் சமர்பிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததுடன் யப்பான் போன்ற வெளிநாடுகள் வடகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதன் போது வடமாகாணத்தின் அடையாளம் காணப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் 30மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை தெளிபடுத்தும் வகையிலான மதிப்பீட்டு மகஜரும் முதல்வர் விக்கினேஷ்வரனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாதாந்தம் இருவரும் சந்திப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.