யாழ். நடேஸ்வராக் கல்லூரி அண்டிய பகுதிகள் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்படவுள்ளது!

vali-north-04யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் 25 வருடங்களாக இயங்காமல் இருந்த நடேஸ்வரா கல்லூரி உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும், நடேஸ்வரா கல்லூரியை அண்டிய சில பகுதிகள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1990ம் ஆண்டு போர் காரணமாக வலி,வடக்கு பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் போர் தீவிரமடைந்தமையினால் மேற்படி மக்களுடைய நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு படையினரால் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் போர் நிறைவடைந்த பின்னர் தங்களுடைய நிலங்களில் தங்களை, மீள்குடியேற்ற வேண்டும். என மக்கள் தொடர்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து சில பகுதிகள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

எனினும் நடேஸ்வரா கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள் தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்தது.

எனவே தங்களுடைய பாடசாலைகள், ஆலயங்கள் தேவாலயங்களை விடுவிக்க வேண்டும். என மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, மற்றும் ஜே.233, 235, 236 ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்படவுள்ளதாகவும் இதற்கான முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த வாரம் ஜனாதிபதி வருகையின் போது அல்லது அதற்கு முன் னதாக மேற்படி நடேஸ்வரா கல்லூரி மற்றும் பொதுமக்களுடைய நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து விடுவிக்கப்படலாம். என மீள்குடியேற்ற அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

எனினும் உத்தியோகபூர்வமாக எவ்விதமான தகவல்களும் வெளியாகியிருக்கவில்லை.

இதேவேளை காங்கேசன்துறை- நடேஸ்வரா கல்லூரி பகுதி மற்றும் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து விடுவிக்கப்படவுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த படையினரின் பயன்பாட்டு பகுதிகள் மற்றும் உயர்பாதுகாப்பு வலய வேலிகள் அகற்றப்பட்டு பின் தள்ளி கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், வழக்கமாக மீள்குடியேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் காங்கேசன்துறை தல்செவண விடுதிக்குச் சென்றுவரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இவ்விடயம் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை அறிய முயன்ற போதும் உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை. என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாளை 18ம் திகதி மீள்குடியேற்ற நிலமைகள் மற்றும் அடுத்த கட்டம் மீள்குடியேற்றப்பட வேண்டிய பகுதிகள் குறித்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் ஒன்று உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பலாலி பகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleகொழும்பில் மக்கள் வெளியேற்றம்…
Next articleதெறி பட சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்த ஷெரிப்