ஆடி கார்… 20 சிம்கார்டுகள்… 5 செல்போன்கள்… அனிதாவின் மறுபக்கம்!

anitha-cheting11‘ஹலோ நான் அனிதா பேசுகிறேன்’ என்ற தலைப்பில் நமது விகடன் டாட்காமில் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்தியை படித்து விட்டு அனிதாவால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மிடம் சொன்ன தகவல்கள் கூடுதல் அதிர்ச்சி ரகமாக இருந்தது.

“அருப்புக்கோட்டையை சேர்ந்த அனிதா, காதலித்து குமாரை கல்யாணம் செய்தார். பிறகு அவரிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி விட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்தார். அங்கு சிகிச்சைக்காக வந்த டிரைவர் சுரேசை காதலித்து, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் குமாரை விவாகரத்து செய்த அனிதா, பலரிடம் வேலைவாங்கித் தருவதாகவும், காதல் வலையில் வீழ்த்தியும் ஏமாற்றியுள்ளார்.

அனிதா, யாரை முதலில் சந்தித்தாலும் அவர்களுடன் நெருங்கிப் பழகுவார். அப்போது சம்பந்தப்பட்டவர்களின் பலம், பலவீனங்களை தெரிந்து கொள்வார். அதோடு அவர்களின் நண்பர்கள் வட்டாரத்திலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். இதை வைத்தே அனிதா தன்னுடைய காரியங்களை கச்சிதமாக முடித்து வந்துள்ளார் என்கிறார்கள் அவரால் பாதிக்கப்பட்டவர்கள்.

என்னுடைய பெயர், ஊரை குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசத் தொடங்கினார் அவர்.

“அனிதாவை முதல் முறையாக கிண்டி ரயில் நிலையத்தில் சந்தித்தேன். ஃபேஷனாக உடை அணிந்த அவர், என்னிடம் ரயில் நேரத்தைக் கேட்டார். நானும் பதிலளித்தேன். பிறகு வேலை, படிப்பு தொடர்பான கேள்விகளைக் கேட்டு விட்டு அவரது செல்போன் நம்பரை என்னிடம் கொடுத்தார்.

அன்றைய தினம் இரவே அனிதாவிடமிருந்து என்னுடைய செல்போனுக்கு மெசேஜ் வந்தது. ‘எப்படி இருக்கீங்க… என்ன பண்றீங்க?’ என்று அதில் கேட்டு இருந்தார். நானும் பதில் அளித்தேன். குட் நைட் என்பதோடு எஸ்.எம்.எஸ் தொடர்பு அன்று முடிந்தது.

மறுநாள் காலை குட்மானிங் என்று மெசேஜ் வந்தது. நானும் பதிலளித்தேன். உடனடியாக என்னிடம் போனில் பேசி நலம் விசாரித்தார். பிறகு வேலை தொடர்பாக பேசினார். நானும் அவரது கேள்விகளுக்குப் பதிலளித்தேன். இரண்டு நாட்கள் கழித்து சென்னை மெரீனாவில் என்னை சந்திக்க விரும்புவதாக சொன்னார். நானும் அவர் சொன்ன நேரத்திற்கு அங்கு சென்றேன். கடற்கரை மணலில் இருவரும் அமர்ந்து அவரவர் விவரங்களை பகிர்ந்து கொண்டோம். அப்போது என்னுடன் நெருக்கமாக அமர்ந்திருந்தார்.

என்னை அவருக்கு ரொம்ப பிடிப்பதாக வெளிப்படையாகவே சொன்னார். அதோடு எனக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்தார். இதனால் அவரை எனக்கும் பிடித்தது. இந்த பழக்கம் தொடர்ந்தது. ஒருநாள் குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீட்டுக்கு என்னை வரச்சொன்னார். அங்கு நான் சென்ற போது என்னிடம் உரிமையுடன் பழகினார். நானும் அவரை முழுமையாக நம்பத் தொடங்கினேன். வேலைக்காக அவர் கேட்ட பணத்தை கொடுத்தேன். இதன்பிறகு வேலை வாங்கித் தராததால் கொடுத்த பணத்தை அவரிடம் கேட்டேன். அப்போது அவர், என்னை மிரட்டினார்.

அதோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னை அழைத்து விசாரித்தார். நான் பணம் கொடுத்து ஏமாந்ததை சொன்னதை அவர் கேட்கவில்லை. போலீஸ் நிலையத்தில் அனிதாவை ராஜமரியாதையாக நடத்தினர். அப்போது தான் நான் ஏமாந்த விவரம் தெரியவந்தது. பிறகு என்னை மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டு போலீஸார் விட்டுவிட்டனர்” என்றார் கண்ணீருடன்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தால் அனிதா பற்றி பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

“அனிதாவின் ஹேண்ட் பேக்கில் எப்போதும் நான்கு முதல் ஐந்து செல்போன்கள் இருக்கும். அதோடு 20க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வைத்திருப்பார். அந்த சிம்கார்டுகள் அனைத்தும் அவருடன் நெருங்கிப் பழகியவர்களின் பெயரில் வாங்கப்பட்டவைகள்.

ஆடி காருடன்தான் அவர் சுற்றுவார். ஒருவரை ஏமாற்றி விட்டு அவர் மீதே புகார் கொடுப்பது அனிதாவின் ஸ்டைல். காதல் மொழி பேசி அவரால் ஏமாந்தவர்கள் அதிகம். அனிதாவுக்குப் பின்னணியில் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. அனிதாவை காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவரும்” என்றனர்.

-விகடன்-

Previous articleயாழ் கரைநகரில் பரஞ்சோதி தற்கொலை
Next articleசங்கக்காரா இடத்தில் களமிறங்கி அவுஸ்திரேலியாவை மிரட்டியதை மறக்க முடியாது: திரிமன்னே