யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த எங்களை எங்களுடைய சொந்த நிலங்களில் சித்திரை புது வருடத்திற்கு முன்பாக மீள்குடியேற்றுங்கள். இல்லையேல் சொந்த நிலங்களுக்குள் கடல் வழியாகவும், தரை வழியாகவும் உள்நுழைவோம். படையினரின் துப்பாக்கி சூட்டையும் வாங்கிக் கொள்ள நாங்கள் தயார்.
மேற்கண்டவாறு வலி.வடக்கு மக்கள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மகளீர் விவகார அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கு காலக்கெடு விதித்திருக்கின்றார்கள்.
இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வலி,வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டத்தின்போதே மேற்படி நான்கு தலைவர்களுக்கும் வலி,வடக்கு மக்கள் குறித்த காலக்கெடு விதித்திருக்கின்றார்கள்.
இன்றைய கூட்டத்தில் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுதல் மற்றும் பாலாலி விமான நிலையம் மற்றும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தி செய்தல் தேவைதானா? என்பது தொடர்பான ஆராய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் இணை தலைவர்களாக முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன், மகளீர் விவகார அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களுடைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் 1990ம் ஆண்டு நாங்கள் எமது சொந்த நிலத்தை இழந்து அகதிகளாக வாழ்கின்றோம். கீரிமலை தொடக்கம் வளலாய் வரையிலான 12 கிலோ மீற்றர் நீளமான கடற்பகுதியை கடற்படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றார்கள்.
விவசாயம், மீன்பிடி இரண்டாலும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த மக்கள் இன்றைக்கு தம்புள்ள மரக்கறிகளை வாங்கிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எங்களுடைய நிலத்தில் படையினர் விவசாயம் செய்து எங்களுக்கே விற்பனை செய்கிறார்கள்.
எங்களுடைய நிலம் எங்களுக்கு வேண்டும். எமக்கு விமான நிலையமும் வேண்டாம், பாரிய துறைமுகமும் வேண்டாம். எங்களுடைய நிலங்களை எங்களுக்கு வழங்குவதற்கான தீர்மானத்தை எடுங்கள்.
எங்களுடைய நிலங்களை வழங்காமல் நாங்கள் அகதிகளாக வாழும் நிலை நீடிக்க முடியாது. எதிர்வரும் சித்திதை புத்தாண்டுக்கு முன் எங்களுடைய நிலத்திற்கு நாங்கள் திரும்ப வேண்டும்.
இல்லையேல்,எங்களுடைய மக்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்டமையால் அவர்கள் தங்களுடைய நிலங்களுக்கு வலிந்து செல்லப்போகிறார்கள் என்பதை முதலமைச்சர் சர்வதேசத்திற்குச் சொல்ல வேண்டும். அதுவே நடக்கும்.
நாங்கள் தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் எங்களுடைய நிலங்களுக்குள் செல்வோம். படையினரின் துப்பாக்கி சூட்டையும் நாங்கள் தாங்கிக் கொள்ள தயாராகவே இருக்கின்றோம். என்றனர்.