சட்டக்கல்லூரியில் அம்பலமாகும் நாமல் மோசடி

namal-lawசட்டக்கல்லூரியில் பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சக மாணவரான துஷார ஜயரத்ன மீண்டும் வழக்கு தொடரவுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அச்சறுத்தல்களால் துஷார ஜயரத்ன தற்போது அரசியல் தஞ்சம் கோரி சுவிட்ஸர்லாந்தில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்காக வெகு விரைவில் நாடு திரும்பவிருப்பதாக தெரிவித்த துஷார ஜயரத்ன, இது தொடர்பான சட்ட ஆலோசனைகளை தற்போது பெற்றுவருவதாகவும் கூறினார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நாமல் ராஜபக்ஷ, சட்டக்கல்லூரியில் பரீட்சை எழுதிய விதம் தொடர்பில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

இணையத்தள வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட இரகசியமான அறையில் அவர் தனித்து பரீட்சை எழுதியிருந்ததாக அதே ஆண்டில் பரீட்சை எழுதிய சட்டக்கல்லூரி மாணவரான துஷார ஜயரத்ன, இதனை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மனுவொன்றை ஸ்ரீலங்கா மனித உரிமை ஆணைக்குழுவில் தாக்கல் செய்தார்.

நாமல் ராஜபக்சவுக்கு பரீட்சையில் மோசடி செய்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டமை தொடர்பில் துஷார தனது முறைப்பாட்டில், பிரதிவாதிகள் சார்பில் சட்டமா அதிபர், சட்டக்கல்லூரி அதிபர் உள்ளிட்ட பலரையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக துஷார பாதுகாப்பு தேடி அரசியல்வாதி ஒருவரது உதவியுடன் சுவிட்ஸர்லாந்திற்குச் சென்று தஞ்சமடைந்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ குற்றவியல் விஞ்ஞானம் தொடர்பில் பட்டத்தை பெறாது, அந்த துறையில் கலாநிதி பட்டத்திற்கான படிப்பை மேற்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு பயிற்சி கருத்தரங்குகளை நடத்தும் பேராசிரியர் ஒருவர் நாமல் ராஜபக்ஷவுக்கான ஆய்வு கட்டுரைகளை தயார் செய்து கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மனுமீதான பரிசீலனைகளின் இறுதியில் நாமல் ராஜபக்ச சட்டக்கல்லூரி தேர்வில் தோற்றியிருந்த வேளை துஷார ஜயரத்ன பரீட்சைக்கு சமூகமளித்திருக்கவில்லை என்று கூறப்பட்டது.

இதேவேளை நாமல் ராஜபக்சவுக்கு எதிராக துஷார, கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமும் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

துஷார ஜயரத்ன ஸ்ரீலங்காவில் இருந்தபோது வெள்ளை வான் கடத்தல், கும்பல் தாக்குதல், தொலைபேசி மூலமான அச்சுறுத்தல் போன்ற அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்திருந்தார்.

Previous articleநாரஹேன்பிட்டிய பகுதியில் இளம் பெண் துணிச்சலாக முன்னெடுத்த வியாபாரம்
Next articleகிளிநொச்சி ஆசிரியர் விடுதிக் கதவுகளை நள்ளிரவில் தட்டும் இராணுவம்!