கிழக்கு கடற்பரப்பில் எண்ணெய்…?

eastதமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு கடற்பரப்பில், எண்ணெய் வள ஆய்வில் பிரான்ஸை தளமாகக்கொண்ட (Total) டோட்டல் என்ற பல்தேசிய எண்ணெய் நிறுவனம் ஒன்று ஈடுபடவுள்ளது.

இதற்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் பல்தேசிய நிறுவனத்துக்கும், ஸ்ரீலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகத்துக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இது தொடர்பான கூட்டு ஆய்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

இந்தக் கூட்டு ஆய்வு உடன்பாடு குறித்த பேச்சுக்கள் 2012ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட போதும், நடைமுறைப் பிரச்சினைகளால் உடன்பாடு கையெழுத்திடப்படுவது தாமதமாகியது.

கிழக்கு கடற்பரப்பில், எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகள் மற்றும் தரவுகள் சேகரிப்பை மேற்கொள்ளும் இந்தக் கூட்டு ஆய்வுக்கு 25 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படுகிறது.

சுமார் 50 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் எண்ணெய் வளம், மற்றும் எரிவாயு வளம் உள்ளதா என்று இந்த ஆய்வுகள் இரண்டு ஆண்டுகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வில், வர்த்தக ரீதியாக எண்ணெய் அகழ்வு மற்றும் எரிவாயு அகழ்வு மேற்கொள்ளப்படுவதற்கு வாய்ப்புகள் இருந்தால், பிரெஞ்சு நிறுவனத்துடன், உற்பத்திப் பங்கீட்டு உடன்பாடு ஒன்றுக்கான பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றாக Total, எண்ணெய் மற்றும் எரிவாயு, உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

இந்த நிறுவனம் உலகில் 130 நாடுகளில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleதிருமண உறவுக்கு முரணான தொடர்பு: மாமியாரை கொலை செய்த பெண்
Next articleமுல்லை வட்டுவாகலில் இராணுவ அட்டகாசம்…!