களவைப் பிடிக்க மகிந்தவின் ஊரிற்கு சென்ற ரணில்….

ranil-rajapakse (1)ராஜபக்சக்களின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அபிவிருத்தித் திட்டங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று ஆராயவுள்ளார்.

ஹம்பாந்தோட்டைக்கு பிரதமர் ரணில் இன்று சனிக்கிழமை விஜயம் செய்கின்றார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் அங்கு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை முழுமையாக ஆராயவுள்ளார்.

யோஷித்த ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சவின் அபிவிருத்தித் திட்டங்களை பிரதமர் நேரில் சென்று ஆராயவுள்ளமையானது ராஜபக்ச குடும்பத்தினர் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியின்போது ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம், கிரிக்கெட் மைதானம், மிருகக்காட்சிசாலை, பூந்தோட்டம், துறைமுகம், சர்வதேச மாநாட்டு மண்டனம் மற்றும் ரண்மிதென்ன சினிமா கிராமம் ஆகியவற்றுக்கு பிரதமர் ரணில் விஜயம் செய்யவுள்ளார்.

கடந்த ஆட்சிகாலத்தில் அபிவிருத்திப் பணிகள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை மையமாக வைத்தே மேற்கொள்ளப்பட்டதாகவும், இத்திட்டங்களில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டிவந்தது.

இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் இங்கு உத்தியோகபூர்வமாக விஜயம் மேற்கொள்கின்றமையால் இவை தொடர்பாக ஆராய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இவற்றை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும் நிர்வாகத்தினருடன் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமுல்லை வட்டுவாகலில் இராணுவ அட்டகாசம்…!
Next articleவிடாமல் விரட்டும் பெண்: அம்பலப்படுத்திய அஸ்வின்