இனம், மதம், மொழி வேறுபாடின்றி கலப்புத் திருமணம் செய்துகொண்டு கலப்பு வாழ்க்கை வாழ்வது, இன ஐக்கியத்தையும் உண்மையான சமாதானத்தையும் ஏற்படுத்த வழிவகுக்குமென வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள ரெஜினோல்ட் குரே, தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்-
‘கலவை என்பது சிறந்த பலன்களை அளிக்கவல்லது என்பது எனது கருத்தாகும். சமூகத்திலுள்ள சாதிகளும், சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று கலக்கும்போது பிறக்கின்ற பிள்ளைகள் ஒரே சாதியில், ஒரே இனத்தில் பிறக்கின்ற பிள்ளைகளைவிட சிறந்தவர்களாக இருப்பார்கள்.
கலப்புத் திருமணம் என்பது கூடாதது அல்ல. கலத்தல் என்பது விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப விளைவுகளின்படி நன்மைகளையே பயக்கும்.
இலங்கையை ஆண்ட அரசர்களில் அநேகர் இந்தியாவில் இருந்தே தமது மனைவியரை வரவழைத்திருந்தனர்.
இங்கு வந்த முஸ்லிம்கள் அனைவரும் சிங்களப் பெண்களையே திருமணம் செய்து கொண்டார்கள்.
எனவே, நாங்கள் தனித்துவத்தைப் பற்றி சிந்திக்க முடியாது. எல்லோருமே கலப்பினத்தவர்களே. இங்கு வந்துள்ள நானும் கலப்பு மனிதனே’ என்றார்.