அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணர் போன்ற இந்துக் கடவுள்களின் வேடங்களில் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பேனர்களால் சர்ச்சை கிளம்பியது. இதை தொடர்ந்து, அவற்றை அகற்ற சொல்லி இருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக, மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் விதவிதமான பேனர்களையும் கட்-அவுட்களையும் வைத்து வருகின்றனர்.
மேலும், தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், அ.தி.மு.க.வில் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களும், தலைமையின் கடைக்கண் பார்வை தங்கள் மீது பட வேண்டும் என்று தலைமையை கவரும் வகையில் வித விதமாக பிரமாண்ட பேனர்களை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி, முகவூர் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள், மற்றவர்களை மிஞ்சும் வகையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வித்தியாசமான பேனர்களை வைத்துள்ளனர்.
அந்த பகுதி அ.தி.மு.க.வினர் வைத்துள்ள பேனர்களில் ஜெயலலிதாவை அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணர் போன்ற இந்துக்கடவுள்களின் வேடங்களில் சித்தரித்துள்ளனர். இது அப்பகுதி மக்களை மட்டுமல்லாமல் ஆன்மீகவாதிகளையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு உள்ளது.
அதனால், ஜெயலலிதாவை கடவுள்போல் சித்தரித்து அ.தி.மு.க.வினர் வைத்துள்ள பேனர்கள், தங்கள் மனதை புண்படுத்துவதாகவும், அவற்றை உடனே அகற்ற வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து செய்தித்துறை அமைச்சரும், விருதுநகர் மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டோம். அதற்கு அவர், ”இப்படிப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டது பற்றி எனக்கு தெரியாது. இது என் கவனத்திற்கு வராமல் செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பான தகவல் எனக்கு வாட்ஸ்-அப்பில் வந்தது. அதை பார்த்ததும், அந்த பேனர்களை வைத்தவர்களை உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்டித்தேன். அதை தொடர்ந்து அந்த பேனர்கள் இன்று காலை அகற்றப்பட்டு விட்டன” என்றார்.