ஜெனீவா தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவதை கண்காணிப்பதற்கு இராணுவத்தை சேர்ந்த குழுவொன்றை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தீவிரமாக முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
சில வாரங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் இராணுவத்தினரை சந்தித்தவேளை மேஜர் ஜெனரல் சகி கலகே ஜெனீவா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு என அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியில் இராணுவத்தின் பிரதிநிதியொருவரையும் இணைத்துக்கொள்ளவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார்,எனினும் வெளிவிவகார அமைச்சர் அதனை நிராகரித்ததை தொடர்ந்தே அவரிற்கும் குறிப்பிட்ட இராணுவ அதிகாரிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் மூண்டது.தற்போது அந்த இராணுவ அதிகாரி இடமாற்றப்பட்டுள்ளார், இவர் முன்னர் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியவர்.
இதேவேளை தன்னை இனங்காட்ட விரும்பாத இராணுவ அதிகாரியொருவர் ஜெனீவா தீர்மானம் குறித்த தமது கரிசனைகளை இராணுவத்தின் மறு ஆய்வுக்குழுவொன்று இராணுவதளபதியிடம் இரண்டு மாதத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா தீர்மானத்தில் தங்கள் கரிசனைக்குரிய விடயங்களை இhணுவதளபதியிடம் சமர்ப்பித்துள்ள அவர்கள் அதனை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரியுள்ளனர்.மேலும் அந்த குழுவினர் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக இராணுவத்தை சேர்ந்த குழுவொன்றை நியமிக்குமாறு இராணுவதளபதியை கோரியுள்ளனர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெனீவா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில நடவடிக்கைகளை தாங்கள் இராணுவ தேவை கருதியே முன்னெடுத்ததாகவும் எனினும் அவற்றை யுத்த குற்றங்கள் என அர்த்தப்படுத்தி அதனுடன் தொடர்புபட்டவர்களை விசாரணை செய்யலாம் என்பதையும் மறு ஆய்வு குழுவினர் இராணுவ தளபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயத்தை தேசத்தின் நலன் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும், பயங்கரவாதத்தை ஓழிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இராணுவதலைமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டி நேரிடலாம், அதேவேளை 10,000 ற்கும் மேற்பட்ட கெரில்லாக்கள் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டு உள்ளனர் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இராணுவத்தினர் யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள தயார் என தெரிவித்துவரும் இந்த குழுவினர் பொதுமக்களிற்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டவையல்ல எனவும் தெரிவிக்கின்றனர் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.