Home விளையாட்டு வில்லியர்ஸ் அதிரடி! T20 தொடரைக்கப்ப்றிய தென்னாபிரிக்கா

வில்லியர்ஸ் அதிரடி! T20 தொடரைக்கப்ப்றிய தென்னாபிரிக்கா

234885.3-670x377இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்து–தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் கேப்டவுனில் நடந்த முதலாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் இங்கிலாந்து–தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியினர், தென் ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். அந்த அணியின் கடைசி 7 விக்கெட்டுகள் 14 ரன்களுக்குள் சரிந்தது.

இதனால் இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 171 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோஸ்பட்லர் 54 ரன்னும், கேப்டன் இயான் மோர்கன் 38 ரன்னும், ஜோரூட் 34 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கைல் அப்போட் 3 விக்கெட்டும், ரபடா, கிறிஸ் மோரிஸ் தலா 2 விக்கெட்டும், இம்ரான் தாஹிர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடி காட்டினார்கள். குறிப்பாக டிவில்லியர்ஸ் ஆட்டத்தில் அனல் பறந்தது. 4–வது ஓவரில் 50 ரன்னை எட்டிய தென் ஆப்பிரிக்க அணி 7–வது ஓவரில் 100 ரன்னை கடந்தது.

அணியின் ஸ்கோர் 8.2 ஓவர்களில் 125 ரன்னாக இருந்த போது ருத்ரதாண்டவம் ஆடிய டிவில்லியர்ஸ் (71 ரன்கள், 29 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன்) அடில் ரஷித் பந்து வீச்சில் ஜோரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத்தொடர்ந்து கேப்டன் டுபிளிஸ்சிஸ், ஹசிம் அம்லாவுடன் இணைந்தார். 14.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரன் கணக்கை தொடங்கும் முன்பு கேட்ச்சில் இருந்து தப்பிய ஹசிம் அம்லா 38 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 69 ரன்னும், டுபிளிஸ்சிஸ் 21 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 22 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாகவும், இம்ரான் தாஹிர் தொடர்நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.