இணுவிலில் வாள் கத்திகளுடன் நடமாடிய ஆவா குழுவினர் மீது சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்ததுடன் மூவர் கைது செய்யப்பட்டுளள்னர்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது.
இணுவில் காரைக்கால் சிவன் கோயிலுக்கு அண்மையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் முகத்தை மறைக்கும் தலைக்கவசங்களுடன் மோட்டார் சைக்கிளிகளில் வாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் ஆவா குழுவினர் நடமாடித் திரிந்துள்ளனர்.
இதனை அவதானித்த சிலர் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் இவர்களைக் கைது செய்ய முனைந்தனர்.
பொலிஸாரைக் கண்டதும் குழுவினர் தப்பிச் செல்ல முற்பட்டனர்.அவர்களை விரட்டிச் சென்ற பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஒருவர் காயமடையவே பொலிஸார் மூவரைக் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நபர் தப்பிச் சென்று விட்டார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். பொலிஸாரால் இவர்களிடமிருந்த ஆயுதங்களும் மீட்கப்பட்டன.
கடந்த ஆண்டு (2014) ஆவா குழுவைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு அதன் பின் எந்த அசம்பாவிதங்களும் இடம்பெறாதிருந்த நிலையில் மீண்டும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.