தடையின்றி குடிநீரை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

நாட்டில் கடும் வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாகக் கருதி, தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கோரிக்கைக்கமைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கூட்டதின் போதே இது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நீர்வழங்கல், நீர்பாசனம், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகள் இணைந்தே கூட்டு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

பிரதமரின் செயலாளர் தலைமையில் மேற்படி மூன்று அமைச்சுகளின் செயலாளர்களை உள்ளடக்கிய வகையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், துறைசார் அரச நிறுவனங்களும் இக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் குடிநீரை பெறுவதில் உள்ள சிக்கல்கள், சுகாதாரமான நீரை வழங்குவதில் உள்ள நெருக்கடிகள் பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பில் கருத்துகளும் பெறப்பட்டன.

அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், ரொஷான் ரணசிங்க, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, சுதர்சன தெனிபிட்டிய, ஜகத் சமரவிக்கிரம மற்றும் பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க உள்ளிட்ட பிரதமர் அலுவலக அதிகாரிகள், நீர்ப்பாசன அமைச்சு, நீர் வழங்கல் அமைச்சு மற்றும் மகாவலி அதிகார சபை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

Previous articleஇன்றைய ராசிபலன்25.08.2023
Next articleதோட்டத்தில் வேலை செய்து விட்டு வீடு சென்றவர் மரணம்