வவுனியாவில் அண்மையில் வன்புணர்வின் பின்னர் கொலை செய்ய்பட்ட மாணவி ஹரிஸ்ணவியின் கொலையை கண்டித்து வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டடோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இப் போராட்டம் வவுனியா காமினி மாகாவித்தியாலயத்தில் இருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரை பேரணியாக கோசங்களையும் பதாதைகளையும் ஏந்தியவாறு சென்றிருந்தது.
இதன்போது வவுனியா மன்னார் வீதியில் போக்குவரைத்தையும் தடை செய்திருந்ததுடன் வீதியிலும் அமர்ந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலைளுக்கு முன்பாகவும் மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந் நிலையில் பேரணியாக சென்றவர்கள் வவுனியா மன்னர் வீதி மற்றும் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வீதியில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டமையினால் ஏ9 வீதி மற்றும் வவுனியா மன்னார் வீதியிலான போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் தடைப்பட்டிருந்ததுடன் போக்குவரத்து மார்க்கங்களும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன.
ஆக்ரோசமாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்ப்hட்டத்தில் ஈடுபட்டமையினால் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் வவுனியா மாவட்ட செயலகத்தின் பிரதான வாயிலும் மூடப்பட்டிருந்தது.
இந் நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தின் வாயிலுக்கு வருகை தந்திருந்த அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, மகஜரை ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கி வைப்பதற்காக மகளிர் அமைப்புகளால் வழங்கப்பட்ட மகஜரை பெற்றுக்கொண்டார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் ரோஹண புஷ்பகுமார,
இந்த மகஜரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பேன். அத்துடன் இது தொடர்பாக நான் கதைத்துள்ளேன். அப்போது அவர் இக் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்கு விசாரணைகளை தொடாங்கியுள்ளதாக தெரிவித்தார். அத்துடுன் கட்டாயமாக இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில் இவ்வாறான விடயங்கள் தற்போது இங்கு மட்டமல்ல, இலங்கையில் எல்லா இடங்களிலும் நடைபெற்று வருகின்றன. இதனை நிறுத்த வேண்டும். அதற்கு பொதுமக்கள் முன்வரவேண்டும். வருவதனாலேயே இதனை நிறுத்த முடியும்.
இந் நிலையில் ஹரிஸ்ணவியின் கொலைக்கு நீதி வழங்காவிட்டால் இவ் விடத்தை விட்டு அகலமாட்டோம் என மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கோசமெழுப்பியிருந்த நிலையில் ஏற்பாட்டாளர்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தீருந்தனர்.
இந் நிலையில் வவுனியாவின் அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்கள் சுமார் ஒரு மணி நேரம் பாடசாலைக்கு வெளியில் வந்து பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஹரிஸ்ணவியின் கொலைக்கு கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
இப்போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், மகளிர் அமைப்புகள், வடபகுதியைச்சேர்ந்த மகளிர் வலையமைப்புகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், முற்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், வவுனியா பிரஜைகள் குழுவின் பிரதிநிதிகள். பாடசாலை அதிபர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.