பலாலி விமானத்தளத்தின் விஸ்தரிப்பு நடந்தே தீரும்! தொடரும் பிடிவாதம்…

Palali-Airportபலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைமைகளினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலும் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பா, மக்கள் மீள்குடியமர்வா என்பது தொடர்பில் மக்களிடம் கருத்தறியுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், விமான நிலைய அபிவிருத்தி தேவையில்லை. மக்களின் குடியமர்வே முக்கியம் என்று தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக யாழ்.மாவட்டச் செயலகத்திலும் இது தொடர்பிலான கூட்டம் நடாத்தப்பட்டிருந்தது. ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, இ.அங்கஜன் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆகியோர் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு இப்போது தேவையில்லை என்றும், மக்களின் குடியமர்வே முக்கியமானது என்றும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இந்தத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இந்தியாவின் நிதியுதவியுடன் பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வடக்கில் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேற்கொள்ளும் அரசின் திட்டத்தின் கீழ் பலாலி விமான நிலையம், பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கப்படவுள்ளதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் நிறைவடைந்த பின்னர் பலாலிக்கும்- இந்தியாவுக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும். இந்தத்திட்டம் சுற்றுப்புற மக்களுக்கோ, மீன்பிடி சமூகத்துக்கோ தடையாக இருக்காது என்று அரசு நம்புகிறது. அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படும்.

இது தொடர்பான உடன்பாடு கையெழுத்திடப்படும் போதே, எப்போது திட்டத்தை ஆரம்பிப்பது, மற்றும் நிதி தொடர்பாக முடிவு செய்யப்படும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleயாழ்ப்பாணத்தில் நேற்று திடீரென 4 பாகை செல்சியசால் எகிறிய வெப்பநிலை
Next articleநடித்துக்கொண்டிருந்த போது மருத்துவமனையில் ரஜினி அனுமதி