நாளை ஹர்த்தால்! யாழ். பல்கலை பூரண ஆதரவு!

harthal 77878dசிறுவர்களுக்கு எதிராக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் பாலியல் வன்கொடுமைகளையும், சிறுவர்களை சித்திரவதை செய்து கொலை செய்வதையும் கண்டித்து, நாளை கிளிநொச்சியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை பூரண ஹர்த்தாலை அனுஷ்டிப்பதற்கு கிளி நொச்சி வர்த்தக சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

சிறுவர்களை பாடசாலைகளுக்கும், வெளியிடங்களுக்கும் அனுப்புவதற்கு பெற்றோர்களும், பாதுகாவலர்களும் அதிகம் அச்சப்படக் கூடிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு எதிரான கொடூர பாலியல் வன்புணர்வுகளும், அதன் பின்னரான கொலை சம்பவங்களும் அதிகம் பதிவாகிய வண்ணம் உள்ளன.

மாணவி வித்தியாவின் கொலை. அதனையடுத்து கொட்டகதெனிய சிறுமி சேயா சந்தவமியும், தற்போது வவுனியா மாணவி ஹரிஸ்ணவியும் என சிறுவர்கள் பாலியல் வன்புணர்வுக்குப் பின் கொலை செய்யப்படுவது தொடர் கதையாய் தொடர்கிறது.

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க விழிப்படைவதோடு, எமது எதிர்ப்பையும் காட்ட இதுதான் நேரம்.

எனவே நாளையதினம் கிளிநொச்சியில் உள்ள அனைத்துகடைகளையும் அடைத்து எமது எதிர்ப்பை தெரிவிப்போம் என கிளிநொச்சி நகர் வர்த்தக சங்கத்தினர் அழைப்பு விட்டுள்ளனர்.

இதேவேளை, நாளைய ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது.

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி செல்வி கங்காதரன் ஹரிஷ்ணவியின் வன்புணர்வின் பின்னரான படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வடக்கில் நடத்தப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை நாளை மறுதினம் (வியாழக் கிழமை) பல்கலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

Previous articleமாணவனின் பிளேட் வீச்சில் நால்வர் காயம்
Next articleஎப்போதும் இல்லாததை விட கடல் மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது