காணாமற்போன பெண்ணின் புகைப்படம் பேஸ்புக்கில் தரவேற்றம்

fbகாணாமற்போன எனது மகள் சிவலிங்கம் அனுசியாவை வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஒருமுறை கண்டேன். அதன் பின்னர் முகப்புத்தகத்தில் இலக்கம் போடப்பட்டு, தரவேற்றியிருந்த படங்களையும் நான் பார்த்தேன் என, காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், சாவகச்சேரி அமர்வில் சாட்சியமளிக்கச் சென்ற தாயொருவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

‘கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றிய எனது மகளை, 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதியன்று, விடுதலைப் புலி உறுப்பினர்கள் பிடித்துச் சென்றனர். தொடர்ந்து, ஸ்கந்தபுரம் பகுதியில் புலிகளில் சீருடையுடன் எனது மகளை கண்டேன். அதன் பின்னர் தகவல் இல்லை.

இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு, வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மகளைத் தேடிச் சென்று, பார்வையாளர்கள் காத்திருக்கும் பகுதியில் அமர்ந்திருந்தேன். அப்போது, வெள்ளை நிறம் கொண்ட உடுப்புக்களுடன் பெண்கள் நிற்பதைப் பார்த்தேன். அதில் எனது மகளை அடையாளங் கண்டேன். அங்கு, இராணுவத்தினரும் பொலிஸாரும் அதிகம் இருந்தமையால் நான் மகளை அழைக்கவில்லை. சிறிது நேரத்தில் அவர்களை வாகனம் ஒன்றில் ஏற்றிச்சென்றனர்.

அங்கு விசாரித்தபோது, நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக வழக்கு நடக்கின்றது அதற்காக ஏற்றிச் செல்கின்றோம் என்றனர். இந்நிலையில், 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பேஸ்புக்கில் எனது மகளின் புகைப்படங்களை ஒருவர் பதிவேற்றம் செய்திருந்தார்’ என்று அந்த தாய் குறிப்பிட்டார்.

Previous articleவித்தியா படுகொலையில் திடீர் திருப்பம்….! மேலும் இருவர் அதிரடி கைது
Next articleதமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் ஒருபோதும் செயற்பட்டதில்லை! வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு!