தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் ஒருபோதும் செயற்பட்டதில்லை! வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு!

tamil enamஓர் அமைப்புக்கு எதிராகவே இராணுவம் செயற்பட்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் ஒரு போதும் செயற்பட்டதில்லையென புனர்வாழ்வு அதிகாரி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயக்க தெரிவித்தார்.
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் கடந்த ஒரு வருடங்களாக புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகள் 14 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வு வவுனியா பூந்தோட்ட புனர்வாழ்வு முகாம் பொறுப்பதிகாரி கேணல் எம்.ஏ.ஆர்.கமிடோன் தலமையில் நடைபெற்றது.

புனர்வாழ்வு அதிகாரி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜெ.ஏ.ரத்நாயக்கா இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது.

2009ம் ஆண்டிலிருந்து 2015 வரை 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்துள்ளோம்.

இவ்வேலைத்திட்டத்திற்கு தனியான நிறுவனங்களோ, திணைக்களங்களோ முன்வராததால் இராணுவத்திடம் இப்பணி கையளிக்கப்பட்டது.

இராணுவம் இவ்வேலைத்திட்டத்தை சரியாக செய்துள்ளதுடன் இப்போது புனர்வாழ்வு நிலையத்தில் 300 பேர் மாத்திரமே புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். அவர்களும் வெகு விரைவில் சமூகத்துடன் இணைக்கப்படுவார்கள்.

அத்துடன் சிறையிலிருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்க தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் செயற்படவில்லை. பயங்கரவாத அமைப்பிற்கு எதிராகவே செயற்பட்டது.

இதேபோன்று ஜே.வி.பி. இயக்கத்திற்கு எதிராக இராணுவம் செயற்ப்பட்டதே தவிர சிங்கள மக்களுக்கு எதிராக செயற்படவில்லை.

ஆகவே இராணுவத்தற்கு எதிராக தமிழ் மக்கள் கோபமோ, வைராக்கியமோ கொள்ளக்கூடாது. எங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையை மாத்திரமே நாங்கள் நிறைவேற்றினோம்.

எனவே நாங்கள் இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன் செயற்பட்டு நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச்செல்ல வேண்டும்.

ஜே.வி.பி.யுடன் யுத்தம் செய்து அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டார்கள் ஆனால் சமூகம் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஜே.வி.பி. அமைப்பின் கிளர்ச்சி முடிவடைந்து அவர்கள் தேர்தலில் போட்டியிட்டார்கள் இன்று எத்தனை பேர் பாராளுமன்றத்தில் உள்ளனர்? சமூகம் அவர்களை ஏற்றுக் கொண்டதா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த 30 வருடகால யுத்தம் எந்தவிதமான நன்மையையும் பெற்றுத் தரவில்லை .யுத்தத்தால் பொருளாதாரத்தில், கலாசாரத்தில் நாடு 30வருடங்கள் பின்தங்கிவிட்டது.

இவ்யுத்தத்தில் மூவின மக்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இராணுவத்தை பொறுத்தமட்டில் நாட்டின் அபிவிருத்தியே முக்கியம்.

அத்துடன் இராணுவம் போராளிகளுக்கான புனர்வாழ்வு பணியை வெற்றிகரமாகவும் நிறைவாகவும் செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Previous articleகாணாமற்போன பெண்ணின் புகைப்படம் பேஸ்புக்கில் தரவேற்றம்
Next articleமுதன் முதலாக குரல் கொடுத்தது குமரிமுத்து தான்- நடிகர் சங்க உறுப்பினர்கள் இரங்கல்