முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் இராணுவ முகாமில் கடமையாற்றி கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபரின் உடலை கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் எவ்வித தடயங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த அகழ்வு பணிகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சம்சுதீன் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. 2009 ஆம் ஆண்டு விசுவமடு இராணுவ முகாமில் கடமையாற்றிய நபர் ஒருவரை இராணுவ அதிகாரி ஒருவர் கொலை செய்து புதைத்ததாக கூறப்படும் இடத்தில் இந்த அகழ்வு இடம்பெற்றது. கொலைச் சம்பவத்தை நேரில் கண்டதாக கூறப்படும் நபரின் வாக்கு மூலத்தையடுத்து அவரையும் அழைத்து வந்தே இந்த அகழ்வு இடம்பெற்றது.
கடந்த மாதம் 9 ஆம் திகதி விசுவமடு பாடசாலைக்கு பின்புறமாகவிருந்த காணி ஒன்றில் இந்த அகழ்வு பணி இடம்பெற்ற போதும் எந்தவொரு தடயப் பொருட்களும் காணப்படவில்லை.இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் அகழ்வு பணிகள் இடம்பெற்ற போதும் எவ்வித தடயங்களும் கண்டு பிடிக்கப்படவில்லை.