கொடிகாமம் புகையிரத நிலையத்தில் 2006, 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவ வதை முகாம் ஒன்று காணப்பட்டதாக காணாமற்போன ஒருவரின் தந்தையொருவர் சாட்சியமளித்தார்.
காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு, சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் இன்று இடம்பெற்றது. இதன்போது சாட்சியமளித்த தந்தையொருவரே இவ்வாறு தெரிவித்தார்.
எனது மகன் பிடித்துச் செல்லப்பட்ட பின்னர் என்னையும் அந்த வதை முகாமுக்கு கூட்டிச் சென்று விசாரணை செய்தனர். அங்கு நிலத்தில் கூரான கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. சுற்றிவர கம்பிகள் இறுக்கப்பட்டிருந்தன. ஒருவரை குப்பறப்படுக்க வைத்து, கைகள், கால்களை இழுத்து கம்பியில் கட்டிய பின்னர் அவர் மேல் ஏறி மிதிப்பார்கள். நான் சென்றபோது, அந்தக் கற்கள் மீது இரத்தக்கறைகள் காணப்பட்டன என அந்தத் தந்தை கூறினார்.