தேனிலவுக்கு சென்ற சென்னை பெண் திடீர் மாயம் காதலனுடன் ஓட்டமா?

loveதேனிலவுக்கு கொடைக்கானல் சென்ற சென்னை புதுப்பெண் திடீர் என்று மாயமாகிவிட்டார். அவர் காதலனுடன் ஓடிவிட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை தம்பதி

சென்னை அம்பத்தூரை சேர்ந்த நேமிசந்த் என்பவருடைய மகன் விக்னேஷ் (வயது 24). இவர் கொடைக்கானல் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எனக்கும், சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ராஜ்மல் என்பவருடைய மகள் வர்ஷாவுக்கும் (23) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி திருமணம் நடந்தது. கடந்த 3 மாதங்களாக நாங்கள் குடும்பம் நடத்திவந்தோம். சில நாட்களுக்கு முன்பு தேனிலவுக்காக வெளியூர் போகலாம் என்று வர்ஷா கேட்டார்.

தேனிலவு பயணம்

அப்போது நான் ஊட்டிக்கு போகலாம் என்றேன், வர்ஷா கொடைக்கானல் போகலாம் என்றார். அதை ஏற்று கடந்த 25-ந்தேதி கொடைக்கானலுக்கு வந்தோம். இங்குள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கி 3 நாட்களாக நகரின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்தோம்.

27-ந்தேதி இரவு வர்ஷா என்னிடம், நான் திருமணத்துக்கு முன்பு ஒரு வாலிபரை காதலித்து வந்தேன் என்றும், என்னை அவருடன் அனுப்பிவிடுங்கள் என்றும் கேட்டார். அதை நான் ஏற்காமல் வர்ஷாவுக்கு அறிவுரை வழங்கினேன்.

காதலனுடன் ஓட்டமா?

மறுநாள் அதிகாலையில் நான் அயர்ந்து தூங்கியபோது வர்ஷா எழுந்து சென்றுவிட்டார். காலை 7.30 மணிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, எனது காதலனுடன் சென்றுவிட்டேன். என்னுடைய பெற்றோருக்கும் இதை தெரிவித்துவிடவும் என்று கூறிவிட்டு செல்போனை அணைத்துவிட்டார். நான் சென்னை சென்று பல்வேறு இடங்களில் வர்ஷாவை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வர்ஷா தனது காதலனுடன் ஓடிவிட்டாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்

Previous articleமாணிக்க கங்கையில் சுறா: ஆச்சரியத்தில் மக்கள்
Next articleகண்டாவளையில் காணிகளை ஏப்பமிடத் தயாராகும் இராணுவம்