புங்குடுதீவு மாணவி மீதான கூட்டு வன்புணர்வுக் கொலை தொடர்பான குற்றப்புலனாய்வு பொலிஸாரின் விசாரணை அறிக்கைகள், நீதிமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்படி கொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளை, அடுத்த வழக்குத் தவணையில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏம்.எம்.எம்.றியால், கடந்த 19 ஆம் திகதியன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு கடுந்தொனியில் உத்தரவிட்டிருந்தார்.
சான்றுப் பொருட்களின் அறிக்கைகள், டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கைகள் என சுமார் 12 அறிக்கைகள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் இதுவரையில் எவ்வித அறிக்கைகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்நிலையிலேயே நீதவான் கடந்த தவணையில் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில், இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் முன்னதாக 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களில் மூன்று சந்தேகநபர்களும் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு, குற்றப்புலனாய்வு பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
புங்குடுதீவு மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாளைய வழக்கில் எதுவும் நடக்கலாம் அது எதிர் பாராத முடிவுகளும் வரலாம் என சட்டமா அதிபர் திணைக்களகத்தின் பெயர் குறிப்பிட முடியாத முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.