யாழில் காதலனால் ஏமாற்றப்பட்ட காதலிக்கு ரூ.100,000 நட்டஈடு!

loverssதிருமணம் செய்வதாகக் கூறி காதலித்து யுவதி ஒருவரை ஏமாற்றிய இளைஞருக்கு 2 வருடங்களுக்கு ஒத்திவைத்த 7 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிட்டார் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தென்மராட்சி வரணி, இடைக்குறிச்சியை சேர்ந்த யுவதி ஒருவரை கரம்பை குறிச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணம் செய்வதாகக் கூறி காதலித்து ஏமாற்றினார். இது குறித்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்தார்.

இதையடுத்து குறித்த இளைஞரை கைது செய்த பொலிஸார் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்த இந்த வழக்கின் குற்றப்பத்திரம் நேற்று வாசிக்கப்பட்டபோது சந்தேகநபரான இளைஞர் குற்றத்தை ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து நீதிவான் தீர்ப்பை வாசித்தார். அதில் குற்றவாளிக்கு இரு வருடங்களுக்கு ஒத்தி வைத்த 7 வருட கடூழிய சிறையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்க உத்தரவிட்டார். மேலும் குற்றவாளியின் கைவிரல் அடையாளங்களை பதிவு செய்யுமாறு நீதிமன்ற பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

Previous articleசெம்மணி வயல்காணியில் ஒரு வாரமாக எரிந்த உடல் பாகங்கள்! பொதுமக்கள் விசனம்!
Next articleயாழில் இருந்து வெளியாகும் குடிநீர்ப் போத்தலில் கரப்பான் பூச்சி – தகவலை!