புத்தர் சிலையை அமைத்து மதவாதம் வளர்க்காதீர்கள்

iranaimadu_vikaaraiநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் 63 சக்தி பீடங்களில் ஒன்று. மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்ட நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் சைவத் தமிழ் மக்களின் சிறப்புக்குரிய வழிபாட்டுத் தலமாகும்.
எனினும், நயினாதீவில் புத்த விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. நயினாதீவில் புத்த விகாரை அமைத்தன் பின்னணி பற்றி சிங்கள மக்களிடம் பல்வேறு வரலாற்றுப் புனைவு கதைகள் இருந்தாலும் சிங்களப் பெரும்பான்மை ஆட்சியில் சிங்கள மக்கள் செல்லும் இடமெங்கும் புத்த விகாரைகளை அமைப்பதே வழமை.

எவரும் தட்டிக்கேட்க முடியாது என்ற வகையில் புத்த விகாரைகள் நாடு முழுவதிலும் ஆக்கிரமித்துள்ளன.

யுத்த காலத்தில் தமிழ் மக்களின் வாழ்விடங்களை கைப்பற்றிய படையினர் அங்கெல்லாம் புத்த விகாரைகளை அமைத்தனர்.

தமிழர்களின் பூர்வீக மண்ணில் தமிழ் மக்களின் சொந்த நிலங்களை கபளீகரம் செய்து அங்கு புத்த விகாரைகளை அமைத்துவிட்டு அதற்கு ஒரு வரலாற்றைப் புனைந்து பரப்புகின்ற அளவில்தான் ஆட்சியின் இலட்சணம் உள்ளது.

இந்நிலையில் நயினாதீவில் அமைந்துள்ள நாக விகாரைக்கு பெளத்த சிங்கள மக்களை சுற்றுலா என்ற பெயரில் செல்ல வைத்து அதற்கென தனியான இறங்குதுறை அமைத்து, பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுகளை முதலில் விகாரை அமைந்துள்ள இறங்குதுறைக்கு செல்ல வைப்பதாக ஆட்சி அதிகாரம் கோலோச்சுகிறது.

சிறுபான்மைத் தமிழ் மக்கள் எதுவும் கதைக்க முடியாது. அதிலும் குறிப்பாக சைவத் தமிழ் மக்களின் பிரச்சினை என்றால் தமிழ் அரசியல் தலைமையில் பேசுவதற்கே ஆளில்லை என்பதாக நிலைமை மாறிவிட்டது.

இதற்கு மேலாக சைவ சமயத்துக்கு எதிராக தொடர்ந்து எழுதுகின்ற மதவெறி பிடித்த ஒரு பேராசிரியர் எப்படியாவது சைவ சமயத்தை வட புலத்திலிருந்து அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறார்.

சைவ சமயத்துக்கு எதிராக எது நடந்தாலும் அதைத் தடுப்பதற்கு எவரும் இல்லை என்ற சூழ்நிலையில்தான், நயினாதீவு கடற்பரப்பில் 67 அடி உயரமான புத்தர் சிலையை நிறுவுகின்ற முயற்சி முன்னெடுக்கப்படுவதாக அறிய முடிகின்றது.

நாட்டில் இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் நயினாதீவு கடற்பரப்பில் புத்தர் சிலை அமைப்பதுதான் அவசியமா?

சைவத் தமிழர்களின் வழிப்பாட்டுத் தலம் உள்ள இடத்தில், கடல் வழிப் பாதையில் 67அடி உயரத்தில் புத்தர் சிலையை அமைப்பதால் அடையப் போகும் இலக்கு என்ன?

இவைபற்றி எல்லாம் சிந்திக்காமல் தமிழ் மக்களின் மனங்களை நோகடிக்கும் நோக்கில் புத்தர் சிலையை அமைத்து இன, மதவாதத் தீயை எரியூட்ட நினைப்பது எந்த வகையிலும் நியாயமாகாது என்பதால் சிலை நிறுவுதல் என்பதை பெளத்த மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களும் கைவிட வேண்டும்.

Previous articleஎந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயார் ஆகுங்கள், ராணுவத்திற்கு கிம் ஜோங் உத்தரவு
Next articleவித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள்! புலனாய்வு பிரிவினர் அறிக்கை