பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் மோடி அரசு பச்சைக்கொடி…?

naliniராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், இந்தியக் குடிமக்களான பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிப்பது தொடர்பாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு சட்ட ஆலோசனையைப் கோரியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரையும் விடுவிக்க தமிழ் நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக இந்தி்ய மத்திய அரசாங்கத்தின் கருத்தை அறிந்து கொள்ள விரும்புவதாகவும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் நேற்றுமுன்தினம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பை வெளியிட்டிருந்த அதேவேளை, இதுகுறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கில் சிறையில் அடைபட்டுள்ள, இந்தியர்களான பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை விடுவிப்பது குறித்து தலைமை சட்டவாளரின் கருத்தை மத்திய உள்துறை அமைச்சு கோரியுள்ளது. அவரது பரிந்துரையின்படி, இவர்களின் விடுதலை குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, இலங்கையர்களான சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலை குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய இந்திய அரசாங்கம் தயாராக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஜெயலலிதாவை ஓவர்டேக் செய்த ஓபிஎஸ்!
Next articleவித்தியா கொலையில் ஒருதலைக் காதல்…! யார் காரணம் தெரியுமா…..?