கிளிநொச்சி – உழவனூர், தம்பிராசபுரம் அ.த.க பாடசாலைக்கு அருகில் இராணுவ முகாம்கள் மீண்டும் அமைக்கப்படுவதனால் மாணவர்கள் அச்சமடைவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் மாத்திரம் ஆசிரியர்களாக கடமையாற்றும் இந்த பாடசாலையை சுற்றி இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பாக சந்தேகம் எழுப்பியுள்ள பெற்றோர்,
இந்த பாடசாலை மாணவர்களுக்கான எந்தவொரு அவசர அவசியத் தேவைகளையும் அந்த பெண் ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளதாகவும், இராணுவ முகாம் அமைக்கப்படுவதனால் மேலும் அச்சமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மீள்குடியேற்றத்தின் பின்னர் கிளிநொச்சி – உழவனூர், தம்பிராசபுரம் அ.த.க பாடசாலையின் தற்போதைய நிலைமை தொடர்பில் பெற்றோர் கவலை வெளியிட்டனர்.
யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தம்பிராசபுரம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் எந்தவொரு அபிவிருத்தி வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இராணுவ முகாம் ஒன்றும் பாடசாலைக்கு அருகில் அமைக்கப்படுவதன் மூலம் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம் என பெற்றோர் கூறுகின்றனர்.
தரம் 05 வரை உள்ள இந்த பாடசாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்கின்ற நிலையில், இங்கு தளபாட மற்றும் கட்டட வசதிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு வளக் குறைபாடுகளும் காணப்படுகின்றன.
இவ்வாறு வளப்பற்றாக்குறையுடன் கல்வி கற்கும் மாணவர்கள் இராணுவ முகாம் அமைக்கப்படுவதனால் உளவியல் தாக்கத்துக்கு உள்ளாகி வருவதாகவும், இதனால் மாணவர்கள் 4 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாடசாலைகளை நாடிச் செல்வதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.
போக்குவரத்து வசதிகளும் சீராக இன்மையால் தூர பிரதேச பாடசாலைக்கு மாணவர்கள் செல்ல முடியாது என்றும் இதனால் மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை இடைநிறுத்த வேண்டியிருப்பதாகவும் பெற்றோர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான சூழலில் பல்வேறு சிரமங்கள் மத்தியில் கல்வியை தொடரும் மாணவர்கள் அமைதியான முறையில் கல்வியை கற்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய அரசாங்கம் இந்த விடயத்தில் அசமந்தப் போக்குடன் காணப்படுவதாகவும், குறிப்பாக பாதுகாப்பு அதிகாரிகளின் அத்துமீறல் செயற்பாடுகளினால் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி உயர் அதிகாரிகள் அச்சத்தினால் மௌனமாக இருப்பதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து 2010ஆம் ஆண்டு வரை அங்கு காணப்பட்ட இராணுவ முகாம் மாணவர்களின் கல்வி வசதி கருதி நீக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படுகின்றமை தொடர்பாக பிரதேச மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.