கெப்பித்திகொல்லாவ கல்வி வலயத்துக்கு உட்பட்ட மதவாச்சி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் நான்காம் தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவரின் சீருடையை களைந்து நிர்வாணமாக சோதனையிட்டதாக கூறப்படும் ஆசிரியை தொடர்பில் மாணவியின் தந்தை வடமத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பாடசாலையில் அமைந்துள்ள தனிப்பட்ட அறை ஒன்றுக்கு மாணவியை அழைத்துச் சென்று மாணவியின் ஆடைகள் அனைத்தையும் அகற்றி அவரை பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையில் மாணவியின் உடலை ஸ்பரிசம் செய்து சோதனையிட்டுள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவிலும் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓரிரு தினங்களுக்கு முன்பாக இடம்பெற்ற இச் சம்பவத்தால் மாணவி மனதளவில் பெரிதும் பாதிப்படைந்துள்ளதுடன் பாடசாலை மாணவ மாணவியர் மத்தியில் இவ் விடயம் தொடர்பாக வெவ்வேறு கருத்துகள் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வகுப்பறையில் வைக்கப்பட்டிருந்த 300 ரூபா பணம் திருட்டுப் போனமையினால் தான் வகுப்பிலுள்ள மாணவிகளை அழைத்துச் சென்று அறை ஒன்றினுள் வைத்து சோதனைக்கு உட்படுத்தியதாகவும் இம் மாணவியை மாத்திரம் இலக்கு வைத்து இச் சோதனை நடத்தப்படவில்லை எனவும் குறித்த ஆசிரியை தெரிவித்துள்ளார்.
மேலும் முறைப்பாட்டில் குறிப்பிட்டது போன்று எந்தவொரு மாணவியையும் நிர்வாணப்படுத்தி சோதனைக்கு உட்படுத்தவில்லை என்றும் தனக்கு அவப்பெயரை உண்டாக்குவதற்காக இவ்வாறு மாணவியின் தந்தை போலியான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார் என்றும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள ஆசிரியை தெரிவித்தார்.
அம் மாணவியின் தந்தை இதற்கு முன்பதாகவும் சில அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக இவ்வாறு போலி முறைப்பாடுகளை மேற்கொண்டு அவர்களை சங்கடத்துக்கு உள்ளாக்கியுள்ளார் என அவ் ஆசிரியை மேலும் தெரிவித்தார்.