நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம்-காங்கேசன்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
மானிப்பாயைச் சேர்ந்த 22 வயதான புவனேஸ்வரன் புவீந்திரன் மற்றும் 19 வயதான ஆரியரத்னம் அபிராஜ் ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் பகல் குறித்த இளைஞர்கள் செலுத்தி வந்த மோட்டார் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து கொன்கிறீட் தூணில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை – கொழும்பு பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 50 வயதான நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த நபர் முச்சக்கர வண்டியின் சாரதி என இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்றும் பௌசர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், இந்த சம்பவத்தினை அடுத்து பௌசர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரன்துடுவ – ஸ்ரீஜயவர்த்தனபுர பிரதான வீதியில் முச்சக்கர வண்டியும், டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதால் இருவர் பலியாகியுள்ளனர்.
இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் பலியாகியுள்ளதாகவும் இதில் 74 வயது பெண்ணொருவர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து டிபர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கண்டி கட்டுகஸ்தொட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தளம் -கட்டுகஸ்தொட்ட பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 61வயதான ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த நபர் பாதையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லொறி ஒன்று இவர் மீது மோதியுள்ளது.
இதனைத் தொடர்ந்து காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.