நளினி 3 நாள் வீடு செல்வதற்கு தமிழக அரசு எதிர்ப்பு

nalini_houseநளினிக்கு மூன்று நாள் பரோல் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால்,, ஒரு நாள் மட்டுமே பரோலில் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினியின் தந்தை சங்கரநாராயணன் அண்மையில் காலமானார். இதைத் தொடர்ந்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கேட்டு, வேலூர் சிறை கண்காணிப்பாளரிடம் நளினி மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட வேலூர் சிறை கண்காணிப்பாளர், நளினிக்கு ஒரு நாள் பரோலில் செல்ல அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து தந்தையின் இறுதிச் சடங்கில் அவர் பங்கேற்றார்.

இந்த நிலையில், வரும் 9-ம் தேதி நடக்க உள்ள தந்தையின் 16-வது நாள் காரியத்தில் பங்கேற்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், “என்னுடைய தந்தை சங்கரநாராயணன் கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி இறந்தார்.

இவரது இறுதிச் சடங்கு சென்னையில் வைத்து கடந்த மாதம் 24ம் தேதி நடந்தது. அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை எனக்கு வேலூர் சிறை கண்காணிப்பாளர் பரோல் வழங்கினார். நானும், என் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன்.

இந்த நிலையில், என் தந்தையின் 16-வது நாள் காரியம், 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக 3 நாட்கள், அதாவது 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை விடுப்பு கேட்டு சிறை கண்காணிப்பாளரிடம் கடந்த 2-ம் தேதி மனு கொடுத்தேன். இதுவரை பரிசீலிக்கப்படாமல் உள்ளது. எனவே, எனக்கு 3 நாட்கள் விடுப்பு வழங்க கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினிக்கு மூன்று நாள் பரோல் வழங்க தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, ஒருநாள் மட்டும் பரோல் வழங்கி நளினிக்கு அனுமதி அளித்தது உயர் நீதிமன்றம்.

Previous articleபொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து கைவிடப்பட்ட காணி சுவீகரிப்
Next articleஅஜித் சாரால் தான் இப்படியெல்லாம் நடக்கின்றது- பேபி அனிகா பேட்டி